“திமுகவினரின் அழுத்தம் காரணமாக எனக்கு சீட் மறுக்கப்பட்டது” - மனம் திறக்கிறார் திருநாவுக்கரசர் | நேர்காணல்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில், தவெகவுடன் கூட்டணிக்கு மறைமுகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது என அரசல்புரசலாக தகவல் பரவ, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் 5 பேர் குழுவை நியமித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதனால், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என கருதப்பட்டு வந்த நிலையில், ராகுல்காந்தியின் நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது, திமுக கூட்டணியில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’ பகுதிக்காக பேசினோம்.
தவெகவுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைய தலைமுறை நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கின்றனர். உங்களது கட்சி பிரமுகர் பிரவீன் சக்ரவர்த்தி கூட விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறாரே?
திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து தேர்தல்களில் வெற்றியை சந்தித்து வருகிறது. இந்த கூட்டணி போட்டியிட்டால் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் புதிய கட்சியுடன் கூட்டணி என்ற விபரீத முயற்சி எடுக்க அகில இந்திய தலைமை விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இதுதான் எனது நிலைப்பாடும் கூட.
திமுகவுடன் பேசுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு மட்டுமே காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ குழு. அவர்கள் திமுகவை தவிர்த்து எந்த கட்சியுடனும் பேசவில்லை. விஜய்யை சந்தித்த பிரவீன் சக்ரவர்த்தி கூட்டணி குறித்து பேசவில்லை என்று தெளிவாக விளக்கியுள்ளார்.
கூட்டணிக்கு வந்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்கிறாரே விஜய்?
எங்களது நோக்கம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெறுவது, ராகுல்காந்தியை பிரதமராக்குவது. அதற்கு திமுக கூட்டணி மட்டுமே சிறந்த வாய்ப்பு. என்னை பொறுத்தவரை இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது சரியல்ல.
தமிழகத்தின் அடுத்த எம்ஜிஆர் தவெக தலைவர் விஜய் என்று சிலர் கூறுகிறார்களே?
தமிழகத்தில் எம்ஜிஆர் போலவே சிவாஜி, விஜயகாந்த் போன்றோர் கட்சி ஆரம்பித்தனர். இவர்களுக்கு கூடாத கூட்டமா?. ஆனால் இவர்களால் எம்ஜிஆராக முடியவில்லை. அதேபோல தமிழகத்தில் ஒரே ஒரு எம்ஜிஆர்தான். விஜய் ஒருபோதும் எம்ஜிஆர் ஆக முடியாது.
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி செங்கோட்டையன் சென்றது தவெகவுக்கு பலமா?
செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றுவிட்டதால் அவரது சமூகம் சார்ந்த ஓட்டுகள், அவர் இருந்த அதிமுகவின் ஓட்டுகள் அனைத்தும் தவெகவுக்கு சென்றுவிடாது.
நீங்கள் வளர்ந்த, வளர்த்த அதிமுகவின் தற்போதைய நிலையை எப்படி பார்க்கிறீர்கள்? அதிமுகவை வலிமைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்திருக்கிறேன். அதிமுக என்ற கட்சியால் நான் வளர்ந்தேன். என்னால் கட்சி வளர்ந்தது. ஆனால், இன்றுள்ள சூழ்நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க எந்த ஐடியாவும் கொடுக்க நான் தயாராக இல்லை. அதற்கு தேவையும் இல்லை.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நீங்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருப்பதாக கூறுகிறார்களே?
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றேன். 2024-ல் மீண்டும் நான்தான் அங்கு போட்டியிட்டு இருக்க வேண்டும். ஆனால் திமுகவில் இருந்தவர்கள், கூட்டணியில் இருந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக எனக்கு சீட் மறுக்கப்பட்டது இன்றளவும் எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுக்கிறது.
உங்களது வாய்ப்பை மதிமுக தட்டிப் பறித்ததா?
வைகோ எனது சிறந்த நண்பர். அவரோ, அவரது மகனோ தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட்டு இருக்கலாம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதிதான் வேண்டும் என்று குறிப்பிட்டு அவர்கள் கேட்டு பெற்றதால் நிச்சயமாக எனக்கு வருத்தம் தான். ஆனால் நான் வைகோவை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. மிகப்பெரிய கூட்டணியில் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் ஏற்படுவது வழக்கம். அதையும்தாண்டி ராகுல்காந்தி மீதான நம்பிக்கை காரணமாக நான் அமைதியாக இருந்தேன்.
இதுபோன்ற அனுபவம் எனக்கு ஏற்கனவே 2004 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்தபோது ஏற்பட்டது. அப்போது நான் போட்டியிட கூடாது என்ற நிபந்தனையின்பேரில் பாஜகவுக்கு ஜெயலலிதா 7 சீட்டுகள் கொடுத்தார். அப்போது போட்டியிடாத என்னை பாஜக மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாக்கினார்கள்.
அதிமுக - பாஜக கூட்டணி வலிமையாக இருக்கிறது. வரும் தேர்தலில் 210 தொகுதிகள் ஜெயிப்போம் என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?
அதிமுக கட்சி சேதாரமான நிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி தற்போதே பலவீனமாக இருக்கிறது. இன்னும் சீட்டுகள் எண்ணிக்கை, தொகுதிகள் ஒதுக்கீடு நடக்கவேண்டும். அதற்குள் இந்த கூட்டணி இருக்குமா என்பதே தெரியவில்லை. நாங்கள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் இனி காமராஜர் ஆட்சி சாத்தியமாகுமா?
தமிழகத்தில் தேர்தல் காலங்களில் எம்ஜிஆர் ஆட்சி; காமராஜர் ஆட்சி என்ற கோஷங்கள் ஒலிக்கும். எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கும். கட்சியின் வளர்ச்சிக்கும் அது உதவும். ஆனால், இதையெல்லாம் ஒரு கூட்டணிக்குள் இருந்து பேசுவது சரியாக இருக்காது. ஏனென்றால் திமுக ஆட்சியில் இருந்தால் அவர்களது ஆட்சிதான் நடக்கும்.
திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகள் கூடுதலாக சீட்டுகள் கேட்கும் நிலை உள்ளது. இதனால் கடந்த தேர்தலில் வாங்கிய சீட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்குமா?
கடந்த முறை காங்கிரஸ் வாங்கிய 25 சீட்டுகள் கண்டிப்பாக குறையாது. அதேநேரத்தில் கூடுதல் சீட்டுகளை கேட்டு திமுகவிடம் நிச்சயம் வலியுறுத்துவோம்.
திமுகவிடம் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா?
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது பேசுவதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் அது நடைமுறைக்கு சரியாக வராது. கடந்த 1980-ம் ஆண்டு முதல் பல்வேறு கூட்டணி கட்சிகள் உதவியுடன் திமுக- அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் ஆட்சி, அதிகாரத்தில் யாருக்கும் பங்கு தந்ததில்லை. இனிமேலும் தருவார்கள் என்று சொல்லமுடியாது.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி மட்டுமே கூட்டணியில் இல்லை. மற்ற கட்சிகளும் இருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் இத்தனை அமைச்சர்கள் என்று பேசிக்கொண்டு நிற்பது நடக்கின்ற காரியமில்லை. இதற்கு திமுக ஒத்துக்கொள்ளாது.
