“அதிமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதே பழனிசாமியின் நோக்கம்” - பொரிந்து தள்ளும் பெங்களூரு புகழேந்தி | நேர்காணல்

“அதிமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதே பழனிசாமியின் நோக்கம்” - பொரிந்து தள்ளும் பெங்களூரு புகழேந்தி | நேர்காணல்

Published on

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானது செல்லாது என நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் பெங்களூரு வா.புகழேந்தி. அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களையும் ஏற்கக் கூடாது என ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருக்கும் அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.

Q

பழனிசாமிக்கு எதிராக நீங்கள் போடும் மனுக்களை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாத போதும் எந்த நம்பிக்கையில் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறீர்கள்?

A

எனது மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை முன்வைத்து நான் தொடுத்த அவமதிப்பு வழக்கை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர் களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். ஜனவரியில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எனது கடும் உழைப்பு வீண் போகவில்லை.

Q

அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ன செய்கிறது..?

A

ஒருங்கிணைப்பு குழு மூலம் கடிதம் எழுதினோம்; பேசிப் பார்த்தோம். சசிகலாவும் தினகரனும் இனி சந்திப்பதாக தெரியவில்லை. ஓபிஎஸ் பாஜக-வை விட்டு வெளியே வரமாட்டார். பழனிசாமி ஹிட்லரை போல இணங்காமல் இருக்கிறார். ஒருங்கிணைப்பு குழு அப்படியே இருந்தாலும் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

Q

ஒருங்கிணைப்பை பழனிசாமி விரும்பாததற்கு என்னதான் காரணம்?

A

தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்கின்ற பயம். இன்னொரு கட்சியோடு ரகசியமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, அதிமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கம்.

Q

மற்ற கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று சொல்லும் அமித் ஷா, அதிமுக-வை ஒருங்கிணைப்பதில் முனைப்பாக இருக்கிறாரே..?

A

முனைப்பு காட்டவில்லை; முற்றிலுமாக அவரே தான் வழி நடத்துகிறார். பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா என அனைவருமே அவரது வளையத்துக்குள் தான் இருக்கிறார்கள். இவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கட்சியை பிளவுபடுத்தி அழகு பார்க்கிறார்கள்.

Q

அதிமுக - பாஜக கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

A

அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும். ஒற்றுமை இல்லாததால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாது. திமுக-வுக்கும் தவெக-வுக்கும் இடையே தான் போட்டியே இருக்கும்.

Q

கையறு நிலையில் இருக்கும் ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?

A

ஓபிஎஸ் தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றி விட்டார். மூத்த தலைவர் பண்ருட்டியாரை விட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஒரு தவறான செய்தியைப் பரப்பினார். “புதிய கட்சியை தொடங்குவோம்” என்று ஓபிஎஸ்ஸை வைத்துக்கொண்டே முழங்கினார் வைத்திலிங்கம். இப்போது, "புதிய கட்சி தொடங்குவதாகச் சொல்லவில்லை” என்கிறார் ஓபிஎஸ்.

தேனி மக்களவை தொகுதியில் ரவீந்திரநாத்தை நிறுத்துங்கள் என்று சொன்னேன். எனது பேச்சைக் கேட்காமல் ராமநாதபுரத்தில், தானே நின்றார். இப்போது சட்டப்பேரவை தேர்தலில் போடியா அல்லது ராமநாதபுரத்தில் ஏதாவது ஒரு தொகுதியா என்ற குழப்பத்தில் உள்ளார். நம்பியவர்களுக்கு மோசம் செய்ததால், 2026 தேர்தலோடு ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்.

Q

தவெக-வில் செங்கோட்டையன் இணைந்திருப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

A

செங்கோட்டையன் அவரது தொகுதியில் மட்டும் செல்வாக்குடன் இருப்பதால் தவெக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார். தனது அரசியல் வாழ்க்கையில் கோபிசெட்டிபாளையத்தை மட்டுமே சுற்றி வந்ததால் வேறு எந்தத் தொகுதியிலும் அவரால் எதையும் சாதிக்க முடியாது.

Q

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தனித்து ஆட்சி என்பது அதிமுக-வுக்கு சாத்தியமாகுமா?

A

வெற்றி பெற வாய்ப்பே இல்லை. ஒருவேளை, வெற்றி பெற்றால், அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை தான் முடிவு செய்யும். அவர்கள் மற்ற மாநிலங்களில் எடுத்துள்ள முடிவைப் போல கூட்டணி ஆட்சியைத்தான் விரும்புவார்கள். பழனிசாமியை ஓரம்கட்டி அரசியலில் இல்லாமல் செய்தும் விடுவார்கள்.

Q

கூட்டணி வெற்றிக்காக இவ்வளவு மெனக்கிடும் பாஜக, அதிகாரத்தில் பங்கு கேட்காமல் இருக்குமா?

A

அதிமுக பாஜக-வின் பிடியில் இருப்பதால் பங்கும் கேட்பார்கள்; நிரந்தரமாக சங்கும் ஊதுவார்கள்.

Q

மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் உள்துறையை பாஜக கையில் வைத்துக்கொண்டால் அதிமுக-வுக்கு சிக்கலாகாதா?

A

அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தாங்கள் தொடர்ந்து ஆட்சிசெய்த 58 ஆண்டுகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்கவில்லை. அவர்களெல்லாம் தேசிய கட்சிகளின் தயவில் ஆட்சி புரிந்தபோதுகூட அவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்காமல் தவிர்த்துக் கொண்டு திராவிட இயக்கத்தை காத்து நின்றார்கள்.

ஆனால், கொள்கை, கோட்பாடு, பிடிப்பு இப்படி எதுவுமே இல்லாமல் கட்சியை நடத்தும் பழனிசாமி, உள்துறையை மட்டுமல்ல... அனைத்து முக்கிய துறைகளையும் பாஜக-வுக்கு கொடுத்துவிட்டு வேலைக்கு ஆகாத துறைகளை அடிமைத் துரைகள் அனுபவிக்க ஒப்புக்கொள்வார்.

“அதிமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதே பழனிசாமியின் நோக்கம்” - பொரிந்து தள்ளும் பெங்களூரு புகழேந்தி | நேர்காணல்
“பாஜகவால் அதிமுகவை எதுவும் செய்துவிட முடியாது!” - வலுவான நம்பிக்கையில் வைகைச்செல்வன் | நேர்காணல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in