‘தேமுதிக வருகையால் வலுவானது திமுக கூட்டணி’ - திருமாவளவன், மு.வீரபாண்டியன் கருத்து

மு.வீரபாண்டியன், திருமாவளவன்

மு.வீரபாண்டியன், திருமாவளவன்

Updated on
1 min read

சென்னை: “திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. திமுக கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது.

எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும். திமுக கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது. கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக வலிமைக்கு வலுச்சேர்க்கும். கடந்த 2017-18-ஆம் ஆண்டுகளில் காவிரி நதி உரிமை உட்பட மக்கள் நலக் கோரிக்கைகளுக்காக நடந்த போராட்டக் களத்தில் உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அரசியல் களத்தில் தொடர்ந்து மாபெரும் வெற்றி பெற்று வருகின்றது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று முன்னேறியது. ஊழல் புதைசேற்றில் மூழ்கி வந்த தமிழ்நாட்டை மீட்பதிலும், பாஜக ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடி பணிந்து, மாநில உரிமைகளை பறி கொடுத்து அஇஅதிமுக ஆட்சி அகற்றுவதிலும் மகத்தான வெற்றி பெற்றது.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான வகுப்புவாத, பாசிச ஏதேச்சதிகார ஆட்சியை அகற்றுவதற்கு, இண்டியா கூட்டணி அமைப்பதில் மறுக்க முடியாத பங்களிப்பை செலுத்தி வலுப்படுத்தியது. இதன் காரணமாக பாஜக பெரும்பான்மை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவையும் அதன் நேரடி கூட்டாளிகளையும், மறைமுக முகமையாளர்களையும் முற்றாக முறியடிக்கும் வலிமையோடு, களம் இறங்க ஆயத்த நிலையில் இருக்கும் போது, இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைத்திருக்கிறது. இதன்மூலம் பாஜகவின் சதிகார, பிரித்தாளும் அரசியல் மாபெரும் தோல்வி அடைந்துள்ளது. வலிமைக்கு வலிமை சேர்க்கும் தேமுதிகவின் முடிவை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மு.வீரபாண்டியன்,&nbsp;திருமாவளவன்</p></div>
திமுக - தேமுதிக கூட்டணி முதல் ‘ஆட்சியில் பங்கு’ விவகாரம் வரை: பிரேமலதா கூறியது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in