

சென்னை: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்றும், அவர்களோடு நாங்களும் இணைந்திருப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக - தேமுதிக கூட்டணி உறுதியானதை அடுத்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், திமுகவுடன் கூட்டணி அமைத்ததற்கான காரணம் குறித்து விளக்கி உள்ளார்.
அவர் தனது பேட்டியில், ‘‘முதல் முறையாக நாங்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். 2011 முதல் 2026 வரை நாங்கள் அதிமுக கூட்டணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தோம். இது உங்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியினர், இம்முறை திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
திமுக - தேமுதிக கூட்டணிக்கு கருணாநிதியும் விஜயகாந்த்தும் பல முறை முயன்றார்கள். அவர்கள் பேசினார்கள். கடந்த 2016-ல் திமுக உடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்பினார். கருணாநிதியும்கூட அப்போது, பழம் நழுவி பாலில் விழப் போகிறது என கூறினார். ஆனால், அது அப்போது நிகழவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அது இப்போது நிகழ்ந்திருக்கிறது. எங்கள் கட்சியின் நிர்வாகிகளின் முடிவுதான் எனது முடிவு’’ என தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமைப் பண்பு குறித்தும், திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், ‘‘மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவியேற்று ஆட்சி செய்து வருகிறார். அவர் தனது ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளார். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், அதுபற்றித்தான் (ஆட்சிக்கு எதிரான மனநிலை) அதிகம் பேசுவார்கள். அவர் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார், என்னென்ன நிறைவேற்றவில்லை என்பது பெரிய கேள்வி. பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றி இருக்கிறார். தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். இது குறித்து நான் பலமுறை பேசி இருக்கிறேன்.
தற்போது கூட்டணி அமைத்திருப்பதால், தேர்தலுக்குப் பிறகு நாங்கள் அவர்களுடன் அதிகம் உரிமையோடு பேச முடியும். எனது யோசனைகளை தெரிவிக்க முடியும். ஏனெனில், நான் அவருடன் (மு.க.ஸ்டாலின்) எவ்வித தயக்கமும் இல்லாமல் பேசுகிறேன். அவரும் என்னுடன் தயக்கமின்றி பேசுகிறார். எனவே, அவர்களுடன் பேச இப்போது அதிக வாய்ப்பு உள்ளது. நிச்சயமாக தமிழக மக்களுக்காக நான் போராடுவேன்’’ எனத் தெரிவித்தார்.
அதிமுக குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘அதிமுக என்பது விஜயகாந்த்துக்கு மிகவும் நெருக்கமான கட்சி கிடையாது. எல்லோருக்குமே இது நன்கு தெரியும். விஜயகாந்த் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது, கருணாநிதி மற்றும் திமுக குடும்பத்தோடு மிகவும் நெருக்கமாக இருந்தார். விஜயகாந்த்தை ஸ்டாலின் அண்ணன் என்றே அழைப்பது வழக்கம். அதேபோல், விஜயகாந்த்தும் ஸ்டாலினை அண்ணன் என்றே அழைப்பார். அவர்களின் நட்பு அப்படித்தான் இருந்தது. இருந்தும் அரசியல் என்று வரும்போது, கூட்டணிக்கு இருவருமே விரும்பினார்கள். ஆனாலும் அது நிகழவில்லை. ஏன் என்று எனக்குத் தெரியாது.
இம்முறை, கருணாநிதி மற்றும் விஜயகாந்த் இருவரின் ஆசியோடு கூட்டணி வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. கூட்டணி மட்டுமல்ல. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். அவர்களோடு நாங்களும் இணைந்திருப்போம்’’ எனத் தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கருத்து பலரவலாக உள்ளது குறித்த கேள்விக்கு, ‘‘ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கும் உரிமை ஒவ்வொரு கட்சிக்கும் உண்டு. சிறியதோ, பெரியதோ ஒவ்வொரு கட்சியுமே இங்கு இருப்பதற்குக் காரணம் அவர்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தானே. எங்கள் உரிமை குறித்து நாங்கள் அவருடன் பேசுகிறோம். பல விஷயங்களை அவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவராக அறிவிக்கும் முன்பாக நாங்களாக் கூறுவது சரியாக இருக்காது. ஏனெனில், கூட்டணியின் தலைவர் அவர்தான். ஐந்து நபர் கொண்ட குழுவை நாங்கள் அமைப்போம். அந்தக் குழு அவர்களோடு பேசுவார்கள். பின்னர் இறுதி செய்து அவர் (ஸ்டாலின்) அறிவிப்பார்’’ என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
மாநிலங்களவை உறுப்பினர் விவகாரத்தில் அதிமுக, தேமுதிகவை ஏமாற்றிவிட்டதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, ‘‘அந்த விஷயம் முடிந்து போய்விட்டது. மீண்டும் மீண்டும் அதைப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. என்ன நடந்ததோ அவை அனைத்தும் உண்மை. ஆனால், அது நடக்கவில்லை. பரவாயில்லை. ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆனால், இது மாநிலங்களவைக்கான தேர்தல் மட்டும் அல்ல. நாங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோம். அது எங்களுக்கு மிகவும் முக்கியம். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தேமுதிகவுக்கு மிகவும் முக்கியம். எனவேதான், நாங்கள் முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம்’’ என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.