

சென்னை: விஜய் பெயரில் ஏராளமான பெட்டிங்கள், சூதாட்டங்கள் நடக்கின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் நேற்று கூறியதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை, திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன.
ஆனால், ஒரு சில நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் அதற்கு நேர் மாறான கருத்துகளை கூறியுள்ளன. நான் களத்தில் நேரடியாக மக்களை சந்தித்த விதத்தில், இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, மகத்தான வெற்றியை பெற்று, திமுக தனித்து ஆட்சியை அமைக்கும். தமிழகத்தில் திமுகவின் ஆட்சி தொடரும்.
தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும்,விஜய் ஆட்சியைப் பிடிப்பார் என்று அனைத்து நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகள் வெளியிடவில்லை.
வட இந்தியாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பின்னணி, பாஜக ஆதரவு, வலதுசாரி இயக்கங்களை சேர்ந்தவர்கள் அவ்வாறு கருத்துகளை வெளியிடுகின்றனர். விஜய் பெயரில் ஏராளமான பெட்டிங்கள், சூதாட்டங்கள் நடக்கிறது. இந்த சூதாட்ட கும்பல் கிளப்புகிற வதந்திதான் இது.
தேர்தலுக்கு முன்பு திமுகவை முன்வைத்து, சூதாட்டத்தை நடத்தினர். அகில உலக அளவில் அது நடந்தது. இப்போது வாக்குப்பதிவுக்கு பின்பு, விஜய்யை முன்வைத்து இந்த சூதாட்ட காய்களை நகர்த்துகின்றனர்.
முன்னாள் டிஜிபி என்பதால், ஒரு போலீஸ் அதிகாரி, விஜய்க்கு ஆதரவாக கூறுவது சரியாகிவிடுமா? இது 100 சதவீதம் பெட்டிங்தான். சூதாட்ட நடவடிக்கைக்காக எடுக்கப்படும் மீடியா ஹைப். நாளை (இன்று) தேர்தல் முடிவு வரப் போகிறது. அப்போது பாருங்கள்.
இளைஞர்கள் நிறைய பேர், இளைய தலைமுறையினர், விஜய்க்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதையெல்லாம், சோசியல் மீடியாக்கள் பெரிதுபடுத்துவதோ, கூறுவதோ கிடையாது என்று கூறினார்.