“பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததே ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம்” - திருமாவளவன் கருத்து

“பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததே ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம்” - திருமாவளவன் கருத்து

படம்: நா.தங்கரத்தினம்

Updated on
2 min read

திண்டுக்கல்: “பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததுதான் ஜெயலலிதாவின் முதுகில் குத்திய துரோகச் செயல்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, ஈரோடு செல்லும் வழியில் திண்டுக்கல்லில் இன்று (பிப்.28) மாலை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தனது கட்சியினரை சந்தித்துப் பேசினார். திண்டுக்கல் தோமையார்புரத்தில் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என்று நம்புகிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் நாளை பொதுக்கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டம் நடக்கும் இடத்தில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பெரியாரின் புகைப்படத்தை பாஜகவினர் அகற்றும்படி கூறியதாக சொல்கிறார்கள். பெரியார் புகைப்படத்தை அகற்றத்தான் செய்வார்கள். அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களை பாஜகவினர் அகற்றாமல் அதிமுகவினர் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.

மதுரையை அயோத்தியாக மாற்றுவோம் என பாஜகவினர் கூறுகின்றனர். மதுரை தமிழகத்தில் இருக்கிறது. வட இந்தியாவில் இல்லை. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இல்லை. ஆகவே, திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றமாகத் தான் இருக்கும். ஒருநாளும் அது அயோத்தியாக மாற தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். பிரதமரின் முருகப்பெருமான் தரிசனம் அவருக்கு நல்வழி காட்டுவதாக அமையவேண்டும்.

குறிப்பாக, மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. சமூக நல்லிணக்கத்துக்குத் தான் இடமுண்டு. அதுதான் முருகப்பெருமானின் வாழ்க்கையும், வரலாறும் நமக்கு உணர்த்தும் பாடம். வள்ளி, தெய்வானை ஆகிய இருவரையும் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றவர் முருகப்பெருமான். அதுவே சமூக நல்லிணத்துக்கான சான்று. இந்த வாழ்வியல் உண்மையை முருகப்பெருமான் பிரதமருக்கு உணர்த்துவார் என்று நம்புகிறேன்.

விசிக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு விரைவில் அறிவிக்கப்படும். அது தமிழக மக்களின் நலனை மையமாக கொண்டிருக்கும். எங்களுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சின்னம் குறித்த எந்தச் சிக்கலும் இந்தத் தேர்தலில் இல்லை. சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம். தொகுதிகள் எத்தனை என்பது கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிக்கப்படும்.

ஆட்சியில் பங்கு என்று அதிமுகவிடம் பாஜக கேட்பதாக கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அதற்கு இடம் கொடுக்க மாட்டார் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இருந்து அமைச்சர்கள் உருவாகுவார்கள் என்று சமீபத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை தருகிறாரா அல்லது திரைமறைவில் பேசியதை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மோடி, அமித் ஷா ஆகியோர் ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழகம் வந்திருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. அப்படி தமிழகம் வரும்போது பல்வேறு உறுதிமொழிகளை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் இதுவரை தமிழகத்தில் நடந்ததில்லை என்பதுதான் கசப்பான உண்மை. நிதிஷ்குமாரை பாஜகவினர் கையாண்டதை போல, தமிழகத்தில் அதிமுகவையோ, திமுகவையோ பாஜகவினர் எளிதாக கையாண்டுவிட முடியாது.

தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரிய விவகாரம் அரசியல் தூண்டுதல் காரணமா, இல்லையா என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது.

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று திரும்ப திரும்ப வலியுறுத்தி சொன்னவர் ஜெயலலிதா. அவருடைய விருப்பத்துக்கு மாறாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததுதான் ஜெயலலிதாவின் முதுகில் குத்திய துரோகச் செயல்.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அது குறித்து திரும்ப திரும்ப எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார் என்பதை நாடறியும். இந்தச் சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக உறுப்பினராக கூட இணைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தயாராக இல்லை என்ற நிலையில் தான் அவர் திமுகவில் இணையும் முடிவை எடுக்க நேர்ந்தது.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு, திமுகவுக்கு வலு சேர்க்கும் என்பதைவிட திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் வலுசேர்க்கும் ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன். அந்த வகையில் அவரின் நிலைப்பாட்டை, துணிச்சலான முடிவை நான் பாராட்டுகிறேன்” என்றார் திருமாவளவன்.

“பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததே ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம்” - திருமாவளவன் கருத்து
ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்தது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in