

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
சென்னை: “என் அரசியல் ஆசானாக திருமாவளவனை ஏற்றுக் கொள்கிறேன்” என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் சமூக நீதித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் அமைச்சர் வன்னி அரசு இன்று பதிலளித்து பேசும்போது, “திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்தேன். ஆனால், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் யாரும் எங்கள் தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவிக்கவில்லை” என்றார்.
இதற்கு பதிலளித்து எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது, “அமைச்சர் வன்னி அரசு எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். எனக்கும் நன்றி தெரிவித்தார்.
திருமாவளவனுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் இடையே இருக்கும் உறவு வெறும் தேர்தல் கூட்டணி இல்லை.
தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி ஆகவும், தேர்தல் முடிவு வந்த பிறகு ஒரு கூட்டணியாகவும் மாறும் கூட்டணி இல்லை. அது ஒரு கொள்கைக் கூட்டணி. நான் பெருமையாக கூறிக் கொள்வேன்... என் அரசியல் ஆசானாக திருமாவளவனை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, திருமாவளவனுக்கு என்றைக்குமே எங்கள் நன்றியை தெரிவித்துகொண்டு இருக்கிறோம்” என்றார்.