

திருமாவளவன்
திருச்சி: காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க தமிழக அரசு வறட்டு பிடிவாதம் காட்டாமல், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரியவில்சன் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஆவணங்களுடன் ஜெபமாலையையும் எடுத்து வந்தது, அவரது தனிப்பட்ட நம்பிக்கை.
அந்த நம்பிக்கையை அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அரசமைப்பு சட்டம் தான், மத நம்பிக்கையையும் அங்கீகரிக்கிறது. அரசமைப்பு சட்டத்தில் உள்ள இந்த முரண்பாட்டை பெரியார் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அம்பேத்கர், பன்மைத்துவத்தை போற்ற இது அவசியம் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இன்றைய பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாகத் தான் இருக்கும்.
ஆட்சி பொறுப்பேற்ற 2 மாதங்களில் பற்றாக்குறையை சரி செய்ய முடியாது. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தை தொடர் விவாதத்துக்கு உட்படுத்த தேவையில்லை. அது நேற்றோடு முடிந்துவிட்டது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது இன்றைய தேவை. மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா தெரிவிக்கிறது.
எனவே, கர்நாடகா அரசியல்வாதிகளின் அரசியலை அம்பலப்படுத்த காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கவுரவம் பார்த்து வறட்டு பிடிவாதம் பிடிக்க வேண்டியதில்லை. உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். தமிழர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.