“எங்களை ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்து பார்த்தாலும் நாங்களே மையம்” - திருமாவளன் பேச்சு

“எங்களை ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்து பார்த்தாலும் நாங்களே மையம்” - திருமாவளன் பேச்சு
Updated on
2 min read

மதுரை: “எங்களை ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்து பார்த்தாலும் நாங்களே மையம்” என நிரூப்பித்துள்ளோம் என்று மேலூரில் திருமாவளவன் பேசினார்.

மேலூர் அருகிலுள்ள மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளன் எம்.பி, அமைச்சர் வன்னியரசு உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து திருமாவளவன் பேசியது: “காலமெல்லாம் நம் மீது காழ்ப்புணர்வு, அவதூறும் பரப்புவர்களே உள்ளனர். தேர்தலுக்கு முன் விரல்விட்டு எண்ணும் நபர் வந்தார்கள், சென்றார்கள். அவர்கள் ஏதோ ஒரு நோக்கத்தில் வெளியேறி அவதூறு பரப்புகின்றனர். மேலவளவுக்கும், திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு என சில சில்லறைகள் பேசுகின்றன.

தமிழகம் முழுவதும் தலித் அரசியல் பேசப்படுகிறது. தலித் ஒருவர் முதல்வராக அறிவிக்கப்படுகிறார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராகக் கூடாது. அதிலும் திருமாவளவன் கூடாதா என்ற விவாதமே விசிகவின் சாதனை. தற்போது எந்த துறையிலும் தலித் பற்றி பேச முடியும் என்ற நிலை மாறியுள்ளது.

சாதி உணர்வால் நாம் வளரவில்லை. எங்களை ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்து பார்க்க நினைத்தாலும் நாங்களே மையம் என நிரூப்பித்துள்ளோம். இரண்டு சீட் என நம்மை கிண்டல் செய்தவர்களுக்கு நமது அருமை புரிந்து இருக்கும். விசிக இன்றி தமிழக அரசியல் இயங்காது. நமக்கு தீர்மானிக்கும் ஆற்றல் இருக்கிறது. தேர்தல் முடிவுக்கு முன்பே தொங்கு சட்டசபை ஏற்படும் என சொன்னேன். இதனால்தான் நான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நிற்கபோவதாக கூறினேன்.

எல்லா அரசியல் கட்சி பிரச்சினைகளுக்கும் நானே பதிலளிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நான் ஏன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை என காரணம் குறித்து திமுக தலைவர், மூத்த தலைவர்களிடம் யாரும் கேள்வி கேட்கவில்லை.

திமுகவில் 60 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்கவில்லை. நான் 3 பேருக்கு மட்டும் வழங்கவில்லை என்பது விவாதமாகிறது. அதிமுகவில் இருந்து 6 பேர் வெளியேறிய முரண் பற்றி பேசுவதில்லை. பழனிசாமி - எம்எல்ஏக்களுக்கு இடையே என்ன பிரச்சினை என அவரிடம் கேட்காமல், என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். அதிமுக எம்எல்ஏ தவெகவில் இணைவது தவெக தலைவரிடம் கேட்க யாரும் முன்வரவில்லை. இதுபோன்ற சூழலில்தான் திருமாவளவன் தாக்குப் பிடிக்கிறான்.

சமூக நீதித்துறை வேண்டாம், வேறு நல்ல துறை வேண்டும் என கேட்பதாக விமர்சிக்கின்றனர். இதுபோன்ற ஒரு சூழல் எழவில்லை. இத்துறையில் வன்னியரசு சிறப்பாக பணிபுரிவதை பொறுக்க முடியவில்லை. இடைத்தேர்தலில் நிற்கவும், அமைச்சரவையில் இடம்பெறமாட்டேன் என முடிவெடுத்த பிறகும், நான் அழுத்தம் கொடுப்பதாக கூறுகின்றனர். இது போன்ற விளக்கத்தை என்னை நம்பும் தம்பிகளுக்கு சொல்கிறேன்.

வெளிப்படையான பொது வாழ்கையிலும், அரசியலிலும் வெளிப்படையாக வாழ்கிறேன். இன்றைக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளோம். நமது இயக்கம் அனைத்து தரப்பு மக்களுக்குமானது. இதற்காகவே தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடத்துகிறோம். நமது இயக்கத்துக்கு கிடைத்த முதல் அமைச்சர் வாய்ப்பு தென்மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியரசுக்கு கிடைத்துள்ளது. இது தென் மாவட்டம் இன்றி தமிழகத்துக்கும் பெருமை.

தமிழக அரசியல் வரலாற்றில் எவராலும் சிந்திக்க முடியாத புரட்சிகர, துணிச்சல் முன்னெடுப்பு நடந்துள்ளது. சாதி, மதம் மரபுகளை கடந்து செயல்பட முடியும் என்பதற்கு அமைச்சரவையில் 8 தலித் சமூகத்துக்கும், கூடுதலாக துணை சபாநாயகர் பொறுப்பு என 9 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டணி ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் இன்றைக்கு மலர்ந்துள்ளது. இதை பாதுகாத்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருக்கிறதோ, இல்லையோ நமக்கு இருக்கிறது. இதன் அடிப்படையில் நமது எதிர்கால அரசியல் நகர்வு இருக்கும்” என்று அவர் பேசினார்.

“எங்களை ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்து பார்த்தாலும் நாங்களே மையம்” - திருமாவளன் பேச்சு
அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு
“எங்களை ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்து பார்த்தாலும் நாங்களே மையம்” - திருமாவளன் பேச்சு
பெனால்டி ஷூட் அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்திய மொராக்கோ | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in