

அமைச்சர் அர.சக்கரபாணி
திண்டுக்கல்: டெல்டா மாவட்டங்களில் நெல்லை வைத்து அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனர் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின், அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விடுபட்டவர்களிடம் இருந்து 29 லட்சம் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் பணியை டிச.12-ம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். தகுதி இருந்தும் கிடைக்கவில்லை என்றால் கோட்டாட்சியர் மூலம் மீண்டும் சேர்க்க வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில், நெல்லின் ஈரப்பதத்தின் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என முதல்வரின் அனுமதி பெற்று, துறை செயலாளர் மத்திய செயலாளருக்கு கடிதம் எழுதினார். மூன்று மத்திய குழுக்கள் வந்து பார்வையிட்டனர். குழு பார்வையிடும் போது நெல்லின் ஈரப்பதம் 20 முதல் 25 சதவீதம் வரை இருந்தது. ஆனால் அனுமதி வழங்கவில்லை.
நெல்லின் ஈரப்பதம் 17-ல் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என சென்னைக்கு வந்திருந்த மத்திய அமைச்சரிடமும் நானும், துறை சார்ந்த அலுவலருடன் இணைந்து கடிதம் கொடுத்தோம். செறிவூட்டப்பட்ட அரிசி 100 கிலோவுக்கு 1 கிலோ கலக்க வேண்டும் என விதி இருந்தது. ஜூலை முதல் மத்திய அரசு புதிய நடைமுறை கொண்டு வந்துள்ளது. அதாவது,10 டன்னுக்கு ஒரு சாம்பிள் என மத்திய அரசு கூறியது. அதற்கு விதிவிலக்காக 25 டன்னுக்கு ஒரு சாம்பிள் எடுக்க வேண்டும் எனக் கூறினோம்.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழகம் ஆகிய இடங்களில் அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், நெல் ஆய்வு மையம் வட இந்தியாவில் உள்ளது.
நெல் ஆய்வு மையத்தை தென்னிந்தியாவுக்கு கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தோம். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நெல் ஆய்வு செய்ய சென்றனர் அவர்களாவது அனுமதி வாங்கி கொடுக்கலாம். பாமக தலைவர் அன்புமணியும் கூட்டணியில் உள்ளார். அவரும் வாங்கித் தரவில்லை.
2021 சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. நெல்லை வைத்து அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனர். அதற்கு எப்பொழுதும் வாய்ப்பு இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் நெருக்கமாக உள்ளார். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் முதல்வர் கொடுத்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு தருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
நெல்லின் ஈரப்பதம் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. அந்த விஷயத்தில் தமிழத்தை வஞ்சிக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சமூகநீதி சமத்துவத்தை காக்கின்ற மாநிலம் என்றார்.