

நேரு விளையாட்டு அரங்கில் கலந்துரையாடல்
சென்னை: “தமிழகத்தில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை எவ்வித பரிந்துரையுமின்றி, முற்றிலும் தகுதியின் அடிப்படையில் கண்டறிவதற்காக புதிய 'திறன் ஆய்வு பிரிவு' (Talent Research Wing) அமைக்கப்படவுள்ளது” என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் இன்று நேரு உள்விளையாட்டரங்கில் விளையாட்டுத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்துக்குப் பின் அவர் கூறியது: “முதல்வர் விஜய் தமிழகத்தின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தீட்டி வருகிறார். அந்த வகையில் விளையாட்டுத் துறையில் எதிர்வரும் காலங்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகள் குறித்தும், அவற்றை செயல்படுத்துவதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் தொடர்புடைய விளையாட்டுத் துறை அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
குறிப்பாக, 2026-27 ஆண்டில் விளையாட்டுத் துறையால் மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு பணிகள், அரசுத் துறை ஒதுக்கீட்டில் விளையாட்டுத் வீரர்களுக்கான 3 சதவீத பணி வாய்ப்புகள் வழங்குவது குறித்தும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், விளையாட்டு விடுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள் குறித்தும், விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவி திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களின் அடிப்படை தேவைகளான காலணிகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் கிடைக்க செய்வதை உறுதிசெய்திடவும், விளையாட்டுத் துறையில் வீரர், வீராங்கனைகள் சாதனை படைக்க பொருளாதாரம் இனி ஒரு தடையாக இருக்கக் கூடாது, என்ற அடிப்படையில் அதற்கு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
இதற்கு விளையாட்டுத் துறை, விளையாட்டுத சங்கங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஒருங்கிணைத்து பணியாற்றுவதால் இது சாத்தியமாகும் என்பதால் விளையாட்டு சங்களின் செயல்பாடுகளை இணையதள வாயிலாக ஒருங்கிணைக்கவும் தேவையான நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் நேரடியாக சென்று விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளவேண்டிய கட்டமைப்புகள் வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.
குறிப்பாக பள்ளி பயிலும் காலங்களிலேயே விளையாட்டில் சிறந்து விளங்கிவரும், ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் தேவையான பயிற்சிகளை வழங்கி சாதனையாளர்களாக திகழச்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக திறன் ஆய்வு பிரிவு (Talent Research Wing) தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் எவ்வித பரிந்துரையும் இல்லாத வகையில் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து சிறந்த வீரர்களை அடையாளம் காணும் வகையில் இக்குழு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.