

படம்: ஜெ.மனோகரன்
சென்னை: “எனக்கும், அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் இருக்கிறதாக ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றனர். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ‘மோடி முகாம்’ நிகழ்ச்சி வடவள்ளியில் உள்ள தனியார் அரங்கில் இன்று (பிப்.12) நடைபெற்றது. இந்நிகழ்வில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் என்ன நடைபெறுகிறது எனத் தெரியவில்லை. தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், திமுக தேர்தல் அறிக்கையில் கூறி வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்த்து போராடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் தூய்மைப் பணியாளர்கள் திமுக அரசை எதிர்த்து போராடினார்.
அதேபோல், அரசு ஊழியர்கள் தங்களது பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தேர்தல் அறிக்கையில் கூறிய நிறைய வாக்குறுதிகளை திமுக அரசு செய்யவில்லை. மக்களிடம் உள்ள எதிர்ப்பு மன நிலை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை.
திமுகவில் குடும்ப ஆட்சி முக்கியமானதாக உள்ளது. துணை முதல்வர் உதயநிதியை அடுத்த தேர்தலில் முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கம் தான் முதல்வருக்கு உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்ய வேண்டும் என்ற நோக்கமோ, எண்ணமோ, சிந்தனையோ முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.
மக்கள் எப்படி போராடுவார்கள் என்றால், என்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறதோ, அன்று வாக்குச்சாவடிக்கு வந்து அவர்கள் மனநிலைக்கு, தே.ஜ.கூட்டணிக்கு வாக்களித்து போராட்டம் நடத்துவார்கள். எங்கள் கூட்டணியில் இன்னும் கட்சியினர் இணைவர்.
தமிழகத்தில் அருமையான ஆட்சியை பழனிசாமி நடத்தினார். பாஜக சார்பில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக அடுத்த ஒரு மாதத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கி விடுவோம். எங்களுக்கு வியூகம் அமைக்க 2 மணி நேரம் போதும். நான் கோவையில் போட்டியிடும் திட்டம் இல்லை. எங்களுக்கு எதிரான மனநிலையில் தான் தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார்.
எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரரராஜன் கூறியது சரியான கருத்து. தமி்ழ்நாடு முழுவதும் 24 ஆயிரம் இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தும் பொறுப்பு அவருக்கு (அண்ணாமலைக்கு) உள்ளது. எனக்கும், அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் இருக்கிறதாக ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது.
தமிழக அரசு அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டத்துக்கு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தவெகவை குறி வைத்து தயாரி்க்கப்பட்டுள்ளதா என நீங்கள் கேட்கின்றீர்கள். நீதிமன்ற தீர்ப்புப்படிதான் தமிழக அரசு நடக்கிறதா? பொதுக் கூட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை திமுக கடைப்பிடிக்கிறது என்றால், எதிர்க்கட்சிகளின் குரல் வளையை திமுக அரசு நெறிக்கிறது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து நாங்கள் கருத்து கூறவேயில்லை. பாஜக பொறுத்தவரை, திமுக இருக்கக் கூடாது, ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்” என்றார்.