‘திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது கிரானைட் தூண்... தீபத்தூண் அல்ல!’ - அரசு, கோயில் தரப்பு பரபரப்பு வாதம்

உயர் நீதிமன்றத்தில் 26 மேல்முறையீட்டு மனுக்கள்... 5 மணி நேரம் விசாரணை!
‘திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது கிரானைட் தூண்... தீபத்தூண் அல்ல!’ - அரசு, கோயில் தரப்பு பரபரப்பு வாதம்
Updated on
3 min read

மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது கிரானைட் தூண் தான்... அது தீபத்தூண் அல்ல. அந்த தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை’ என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்ததற்கு, ‘திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது தொடர்பாக ஏன் பரிசீலிக்கக் கூடாது?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிகுமார் உட்பட 4 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுக்களை ஏற்று தீபத்தூணியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் நிர்வாகம், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 20 மேல்முறையீடு மனுக்களும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 6 மேல்முறையீடு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், “திருப்பரங்குன்றத்தில் 73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயிலில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மனுதாரர்களின் தனிப்பட்ட கோரிக்கையை உரிமையாக கோர முடியாது. விளக்கு ஏற்றுவதாக இருந்தால் கோயில் நிர்வாகம் தான் ஏற்ற வேண்டும். தனிநபர்கள் விளக்கு ஏற்றக் கூடாது. மனுதாரரின் கோரிக்கையை அப்படியே ஏற்க முடியாது. மத நல்லிணக்கம், பொது அமைதியைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

திருக்கார்த்திகைக்கு 3 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றால் எப்படி?

102 ஆண்டுக்கு முந்தைய உரிமையியல் நீதிமன்ற உத்தரவு, பிரிவி கவுன்சில் உத்தரவு, நீதிபதி கனகராஜின் உத்தரவு அனைத்திலும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபமேற்றுவதை உறுதி செய்கின்றன.

பொது அமைதியை நிலைநாட்டுவது அரசின் தலையாய பணி. எந்த மதமாயினும், பொது அமைதியைக் குலைக்காத வகையில் வழிபாடு நடக்க வேண்டும். பழமையான பழக்கவழக்கங்களை மாற்றுமாறு கோர இயலாது. இது கோயில் சொத்துரிமை தொடர்பான வழக்கும் அல்ல. ஒரு புதிய பழக்கத்தை கொண்டு வருவது தொடர்பானது.

இதுவரை வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை அமல்படுத்த கோரிய வழக்கு. தனி நீதிபதி உத்தரவில் ராமஜென்ம பூமி வழக்கை மேற்கோள் காட்டியுள்ளார். அந்த உத்தரவு இவ்வழக்கில் பின்பற்றப்பட்டால் மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தையே நாட உத்தரவிட்டிருக்க வேண்டும். வழிபாட்டுத்தலங்களுக்கான சிறப்புச் சட்டப்படி 1947-ம் ஆண்டு ஒரு வழிபாட்டுத் தலம் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையிலே பராமரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையிலும் இந்த உத்தரவு ஏற்கத்தக்கதல்ல. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

அப்போது நீதிபதிகள், “தீபம் அனைவருக்கும் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக மலையில் உள்ள தூணியில் தீபம் ஏற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை ஏன் அதை செய்யக் கூடாது?” என்றனர்.

அதற்கு அரசு தரப்பில், ‘எந்த முடிவாக இருந்தாலும் தேவஸ்தானம் மட்டுமே எடுக்க வேண்டும். இந்த வழக்கு முழுக்க முழுக்க சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே செல்ல வேண்டும் என அரசு விரும்புகிறது’ எனக் கூறப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், “இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். நீதிபதி கனகராஜின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்குமாறு அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்திருக்கலாம். அதை ஏன் செய்வில்லை?” என்றனர்.

கோயில் செயல் அலுவலர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி வாதிடுகையில், “நீதிபதி கனகராஜின் உத்தரவில், தேவஸ்தானமே தீபம் ஏற்ற வேண்டும், தீபம் ஏற்றும் இடத்தை விதிகளுக்கு உட்பட்டே மாற்ற இயலும் எனக் கூறியுள்ளார்.

மனுதாரர் மலை உச்சியில் தீபமேற்றக் கோரியுள்ளார். 2 உச்சிகளில் 1 உச்சியில் தர்காவும், மற்றொரு உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளன. கோயில் நிர்வாகத்திடம் அளித்த மனுவில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் குறிப்பிடவில்லை.

மனுதாரர் கோரிக்கை மனுவில் குறிப்பிடாதவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார். தனி நீதிபதியின் உத்தரவு முழுக்க முழுக்க மனுதாரருக்கு சாதகமான விவரங்களை மட்டும் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர் தரப்பு வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை.

வாதங்களின் அடிப்படையிலேயே உண்மை கண்டறியப்பட வேண்டும். மோட்ச தீபம் ஏற்றும் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. அதன் அருகில் வேறொரு இடத்தில் ஏற்றப்படுகிறது. அது ஆகம விதிகளுக்கு எதிரானது என நிரூபிக்கப்படவில்லை. மலையில் 8 அடி உயரமுள்ள 1 அடி அகலம் கொண்ட கிரனைட் தூண் தான் உள்ளது. அங்கு தீபத்தூண் இல்லை” என்றார்.

நீதிபதிகள், “அது தீபத்தூண் இல்லை என எப்படி கூறுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர்.

கோயில் நிர்வாகம் தரப்பில், “இது பிரிட்டிஷ் காலத்தில் மலைகளை அளப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சர்வே தூண். இது போன்ற சூழலில் அது தீபத்தூண் தான் என்பதை நிரூபிக்க எந்த ஆவணமும் மனுதாரரால் தாக்கல் செய்யப்படவில்லை. தீபத்தூண் மலை உச்சியில் இருப்பதாக தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளது சரியான தகவல் அல்ல.

இரு உச்சிகள் உள்ளன. ஒன்றில் தர்காவும், மற்றொரு உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளன.

மனுதாரர் குறிப்பிட்டுள்ள தூண், கோயிலுக்கு சொந்தமானது என்பதில் சந்தேகமில்லை. இரு நீதிபதிகள் முடிவு செய்த விவகாரத்தில் தனி நீதிபதி தலையிட்டு தானாக உத்தரவிட இயலாது. கருத்துகளைக் கூறி தலைமை நீதிபதிக்கே பரிந்துரைத்திருக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “குதிரைச்சுனை பகுதியில் தீபமேற்றினால் தீபம் தெரியாது என்பதற்காகவே உச்சிப்பிள்ளையார் கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

கோயில் நிர்வாகம் தரப்பில், “குதிரைச்சுனை தீபத்தூண் என குறிப்பிடப்படும் பகுதி அருகிலேயே உள்ளது. அப்படியிருக்கும் போது தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி எப்படி உத்தரவிட முடியும்?” எனக் கூறப்பட்டது.

நீதிபதிகள், “அனைவருக்கும் தெரியும் வகையில் அந்த தூணில் முன்பு ஏற்றப்பட்டிருக்கலாமே?” என்றனர்.

அதற்கு, “அப்படியே இருந்தாலும் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு தெரியும் வகையில் தீபமேற்ற வேண்டும் என்றால் 8 அடி உயரம், 1 அடி அகலம் கொண்ட தூணில் எப்படி தீபம் ஏற்றியிருப்பார்கள்? அதற்கான ஆவணம் எதும் தாக்கல் செய்யப்படவில்லை. அந்தத் தூண் கிரானைட்டால் ஆனது. தீபமேற்றும் போது அது வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்” எனக் கூறப்பட்டது.

நீதிபதிகள், “அந்தத் தூணை யாரும் ஆய்வு செய்தார்களா?” என்றனர்.

கோயில் தரப்பில், “தூண் தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தூண் உண்மையில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்டதா? அல்லது அது சர்வே தூண் தானா? என்பதை முடிவு செய்ய தனி நீதிபதி தவறிவிட்டார். அந்தத் தூண் உண்மையில் பார்க்கையில் சர்வே தூண் அமைப்பையே கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், “அந்த தூண் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. அது ஏன் தீபத்தூணாக இருக்கு முடியாது?” என்றனர்.

செயல் அலுவலர் தரப்பில், “அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை” எனக் கூறப்பட்டது.

அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வாதிடுகையில், “திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கனகராஜ் உத்தரவு முக்கியமானது” என்றார்.

நீதிபதிகள், “மலையின் உரிமையாளர்கள் தேவஸ்தானம். வருங்காலத்தில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது தொடர்பாக தேவஸ்தானம் முடிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளதே?” என்றனர்.

அறநிலையத் துறை தரப்பில், “முந்தைய தீர்ப்புகள் அனைத்திலும் தீபத்தை தேவஸ்தானமே ஏற்ற வேண்டும். தனிநபர் யாரும் ஏற்றக் கூடாது. தீபம் ஏற்றும் இடத்தை மாற்ற வேண்டும் என்றால் தேவஸ்தானமே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், “தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது தொடர்பாக தேவஸ்தானம் பரிசீலிக்கலாம் என தனி நீதிபதி கூறியுள்ளார். இந்த கோரிக்கையை ஏன் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கக் கூடாது.

நீதிபதி கனகராஜ் உத்தரவில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுமாறு யாரும் கோரக் கூடாது எனக் கூறப்படவில்லையே?

கார்த்திகை தீபம் ஏற்றுவதில் பிரச்சினை இல்லை. எங்கு தீபம் ஏற்ற வேண்டும், வேறு இடத்துக்கு மாற்றலாமா என்பதில் தான் பிரச்சினை” என்றனர்.

பின்னர் விசாரணையை டிசம்பர் 15-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

‘திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது கிரானைட் தூண்... தீபத்தூண் அல்ல!’ - அரசு, கோயில் தரப்பு பரபரப்பு வாதம்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ‘பதவி நீக்க’ தீர்மானம் நிறைவேறுவது சாத்தியமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in