

சேலம்: வார்டன்கள் தாக்கியதால் தேனி சிறையில் இருந்து தப்பியதாக கைதிகள் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட 6 கைதிகளிடம் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழுவினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
தேனி சிறையில் இருந்து வார்டன்களை தாக்கி வி்ட்டு 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய 17 பேரையும் போலீஸார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பலத்த பாதுகாப்பு மிக்க சிறைகளில் தனித்தனியாக பிரித்து அடைக்கப்பட்டனர்.
இதன்படி, தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகள் சோலை முகிலேஸ்வரன் (20), முத்து (23), மீனாட்சிசுந்தரம் (26), சபரிநாத் (25), நிஷாத் (25), தருண்குமார் (21) ஆகிய 6 பேர் சேலம் மத்திய சிறையில் கடந்த நவ.1-ம் தேதி அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகள், தங்களை சிறையில் வார்டன்கள் அடித்ததால்தான் தப்பிச் சென்றதாக வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேனி கைதிகள் 6 பேரிடம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷியாமளா தலைமையிலான குழுவினர் நேற்று விசாரணை செய்தனர். குறிப்பாக, வீடியோ வெளியிட்ட கைதிகளான சோலை முகிலேஸ்வரன், மீனாட்சிசுந்தரம், சபரிநாதன் ஆகியோர் சிறை வார்டன்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்தனரா என்றும், அவர்களின் அங்க அடையாளங்கள் குறித்தும் ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.
மேலும், சேலம் மத்திய சிறையில் உள்ள மருத்துவக் குழுவினர் 6 கைதிகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தினர். அவர்களுக்கு காயம் உள்ளதா என்றும், உடல் உபாதைகள் உள்ளதா என்பது குறித்தும் பரிசோதனை செய்தனர். கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த விசாரணை அறிக்கையை சட்டப்பணிகள் குழு மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.