

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: பொங்கல் பண்டிகையொட்டி இந்த ஆண்டுக்கான உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.
அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு வாடிவாசலில் கோயில்காளைகள் அவிழ்க்கபட்டன. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும் அவிழ்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றிலும் சீருடையணிந்த தலா 50 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி வருகின்றனர். போட்டியில் 1000 காளைகள், 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
வாடிவாசலில் சீறிபாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கி வருகின்றனர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை பக்கத்தில் நெருங்கவிடாமல் அலறவிட்டு களமாடி வருகின்றன. பிடிக்க முயன்ற வீரர்களை தூக்கிவீசிவிட்டும் சில காளைகள் பரிசுகளை தட்டி சென்றன.
வாடிவாசலில் வீரர்களை நெருங்கவிடாமல் நீண்ட நேரம் காளைகள் விளையாடியதால் தொடர்ந்து காளைகளை அவிழ்க்க முடியவில்லை. பிறகு காவல் துறையினர் வாகனம் மூலம் வெளியேற்றப்பட்டன.
இப்போட்டியில் நன்றாக களமாடும் முக்கிய காளைகள் களமிறக்கபட்டதால் பிடிக்க வீரர்கள் தயங்கினர். இதனால் மாடுகளை தயக்கமின்றி பிடிக்க விழா கமிட்டியினர் அறிவுறுத்தினர். ஒரு கட்டத்தில் காளைகளை பிடிக்க முடியவில்லை என்றால் வெளியேறுங்கள் என வீரர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
போட்டியை காண அதிகாலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்து பார்வையாளர்கள் குவிந்தனர். இவர்கள் கண்டுகளிக்கும் வகையில் கேலரிகள் அமைக்கபட்டு இருந்தது. இதில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகளுக்கென தனி கேலரிகள் ஏற்பாடு செய்திருந்தன.
தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி மேற்பார்வையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
போட்டியில் காயமடைந்தவர்களை உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வேன்கள் தயார்நிலையில் வைக்கபட்டன.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்ககாசு பீரோ, கட்டில், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறந்த சிறந்த வீரருக்கு கார், காலைக்கு டிராக்டர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.