

படம்: சாம்ராஜ்
புதுச்சேரி: வாரம் தோறும் ஞாயிறன்று சைக்கிள் ஓட்ட அறிவுறுத்தி நடந்த பேரணியில் மத்திய அமைச்சர், புதுச்சேரி பேரவைத்தலைவர், புதுச்சேரி அமைச்சர் மற்றும் இளையோரும் சைக்கிள் ஓட்டினர். தொகுதி தோறும் மைதானம் அமைக்க ரூ. 300 கோடி கோரி புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளது.
புதுவை கடற்கரை சாலையில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் சைக்கிளத்தான் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. போட்டியை மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா, துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் நமசிவாயம், தலைமை செயலாளர் சரத் சவ்கான் ஆகியோர் வண்ண பலூன்கள் பறக்க விட்டு தொடங்கி வைத்தனர்.
பத்ம பூஷன் விருது பெற்ற பி.ஆர்.ஸ்ரீஜேஷ், சரத் கமல் ஆகியோர் கலந்து கொண்டனர். சைக்கிள் புக்லெட் வெளியிடபட்டது. விழாவில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், "கடந்த ஓராண்டு முன்பு பரிசோதனை அடிப்படையில் வாரம் ஒரு நாள் சைக்கிள் ஓட்டுவதை 500-க்கும் குறைவானோருடன் தொடங்கினோம். இது நாடு முழுதும் சென்றடைந்துள்ளது.
தற்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்று சைக்கிள் ஓட்டுகின்றனர். வாரம் ஒரு நாள் சைக்கிள் ஓட்டுவதால் அது மனநிலையை மாற்றுகிறது. வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கிறது. கார்பன் உமிழ்வை ஒரு கிமீ சைக்கிள் பயணம் பெருமளவு குறைக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் இதில் பங்கேற்கலாம்." என்றார்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 'ஆரோக்கியமாக இருக்க வாரத்தில் ஒரு நாளாவது சைக்கிள் ஓட்ட வேண்டும். வாகனங்கள் இருப்பது வளர்ச்சிதான் இருந்தாலும் நாம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உடற்பயிற்சி அவசியம். சைக்கிள் ஒட்டினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எல்லாவற்றையும் விட உடல் ஆரோக்கியம் முக்கியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனசும் ஆரோக்கியமாக இருக்கும். பிரதமர் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் ஓட்டும் நிகழ்வை தொடக்கி வைத்து ஓராண்டாகியுள்ளது.
உடல் தகுதியுடன் இருந்தால் எதையும் செய்ய முடியும். ஏதாவது ஒரு விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கபடுகிறது. குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவது அழகு. அதை அப்படியே வாழ்வில் கடைபிடித்தால் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். வாரம் ஒரு நாளாவது சைக்கிளில் செல்லலாம். நல்ல பழக்கத்தை மோடி உருவாக்கியுள்ளார்" என்றார்.
நிகழ்ச்சியில் புதுப்பிக்கபட்ட பிட் இந்தியா மொபைல் செயலி அறிமுகப்படுத்தபட்டது. பின்னர் மத்திய அமைச்சர், பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் சைக்கிள்களில் கடற்கரை சாலையில் இருந்து புறப்பட்டு செஞ்சி சாலை, சுப்பையா சாலை வழியாக தலைமை செயலகம் வந்தடைந்தனர்.
இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிட் இந்தியா இயக்கம் ஆரோக்கியத்துக்காக துவங்கப்பட்டது. ஞாயிறு தோறும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவதை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடந்தது.
புதுவை விளையாட்டுகளை கிராமங்களில் திடல்கள், உள் விளையாட்டு அரங்கை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 25 கோடி அரசு ஒதுக்கி உள்ளது. 30 தொகுதிகளிலும் விளையாட்டு மேம்பாட்டுக்கு தலா ஒரு மைதானம் அமைய தலா ரூ. 10 கோடி வீதம் ரூ. 300 கோடி பெற கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். 2004-ல் இருந்து தேசிய, உலக அளவில் பங்கேற்றோருக்கு ஊக்கத்தொகை தர ரூ. 3 கோடி நிதி ஒதுக்கி வெகுவிரைவாக தர நடவடிக்கை எடுத்துள்ளோம். கிராம விளையாட்டு மேம்பாட்டு மைதானங்களை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது. " என்றார்.