

வானதி சீனிவாசன்| கோப்புப் படம்
சென்னை: “காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வரைச் சந்திக்க முதல்வர் விஜய் பெங்களூரு செல்வதாக இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி தலைவர்களையும் உடன் அழைத்துச் சென்று, தமிழக தரப்பு வாதங்களை முன்வைக்க வேண்டும்” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியானது சற்றே ஆறுதல் அளிக்கிறது.
இதற்கான முக்கியக் காரணங்களாக காவேரி ஆற்றின் நீரை அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும், மேலும் திட்ட அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அதைத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பதிலானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக வெளிவந்துள்ளது.
ஆனால், தமிழக அரசு இதனையே ஒரு பெரிய வெற்றியாகக் கருதாமல் தொடர்ந்து அணை கட்டும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழக தரப்பு வாதங்களை மத்திய நீர் வள ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளிடம் தெளிவாக எடுத்துக் கூறி உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே காவிரி நீர் பங்கீட்டில் நமது உரிமைகளைப் பறிகொடுத்து வருகிறோம். இனியும் அலட்சியம் காட்டாமல், கர்நாடக அரசின் திட்ட அறிக்கை எதனால் நிராகரிக்கப்பட்டது என்பதை தமிழக தரப்பிலும் தீர்க்கமாக ஆராய்ந்து, அதனையும் நமக்கான சாதகமாகப் பயன்படுத்தி மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், முதல்வர் விஜய் காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வரைச் சந்திக்க பெங்களுரு செல்வதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களையும் உடன் அழைத்துச் சென்று தமிழக தரப்பு வாதங்களையும், நியாயங்களையும் முன்வைத்து தமிழக நலனுக்கான உரிமைகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.