

தஞ்சாவூர் பெரிய கோயில் திருச்சுற்றுமாளிகையில் உள்ள கல்வெட்டுகள் மீது படியும் வகையில் யாகத்தில் இருந்து வெளியேறும் புகை.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் தென்புறத்தில், வராகி அம்மன் சந்நிதி உள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழா நிகழாண்டு ஜூலை 13ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, வராகி அம்மன் சந்நிதியின் தென்புறத்தில் உள்ள திருச்சுற்று மாளிகையில் தினமும் யாகம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த யாக குண்டத்தில் இருந்து வெளி யேறும் புகை, திருச்சுற்று மாளி கையில் உள்ள கல்வெட்டுகள் மீது படிந்து கருப்பாக மாறி வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் நீர் வெளியேற வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். இவ்வாறு தேங்கும் அபிஷேக நீரை தன்னார்வ பெண்கள் தினமும் கைகளால் இறைத்து வெளியேற்றி வருகின்றனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் பெரிய கோயில் பாதுகாப்பு குழுச் செயலாளரும், வழக் கறிஞருமான வெ.ஜீவக்குமார் கூறியது: தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள வராகி அம்மன் சந்நிதி அருகில் உள்ள திருச்சுற்று மாளிகையில் பல ஆண்டுகளாக இதுபோன்று யாகம் நடத்தப்பட்டு, அதில் இருந்து வரும் புகை கல் வெட்டு மீது படிந்து வருகிறது.
இதனால், எதிர்காலத்தில் கல்வெட்டுகள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும். அதேபோல, வாராகி அம்மன் அபிஷேக நீர் தேங்காமல் வெளியேறும் வகையில் கட்டமைப்பை உடனே ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.