ஸ்டாலின் பேச்சை திட்டமிட்டு திரித்து பரப்புகின்றனர்: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

ஸ்டாலின் பேச்சை திட்டமிட்டு திரித்து பரப்புகின்றனர்: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவைச் சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதை, ஆட்சிக்கவிழ்ப்பு என்று சிலர் திட்டமிட்டுத் திரித்துப் பரப்புகிறார்கள்’’ என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதமே ஆகிறது. நாளிதழ்களையும், காட்சிகளையும் திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் நடமாட்டம் போன்ற செய்திகள்தான் நிறைந்துள்ளன.

துரதிர்ஷ்டவசமாக, பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான தவெக நிர்வாகிகளே நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவரே, அவரது சொந்த கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், அந்த பெண்ணால் குற்றம்சாட்டப்பட்ட ஆளும் கட்சி எம்எல்ஏ மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணையே கட்சியை விட்டு நீக்கியுள்ளது இந்த அரசு.

புதிய அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுத்து விமர்சிக்காமல் இருப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பே அறிவித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலைமை மிக மோசமாகச் சென்று கொண்டிருப்பதால் தான் அவர் விமர்சிக்க நேர்ந்தது.

‘ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது' என்றுதான் அவர் பேசினார். ஆனால், 'மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்' என்று ஸ்டாலின் சொன்னதாகச் செய்திகள் திட்டமிட்டுத் திரித்து பரப்பப்படுகின்றன.

உண்மை என்னவென்றால், ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல. ‘ஆசை அறுபது நாள்' என்பார்கள். ஆனால், இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்த மக்கள் ஒரு வாரம் கூட நிம்மதியாக இல்லை.

ஆட்சிக் கலைப்பு அல்லத கவிழ்ப்பு என்ற எண்ணத்தில் ஸ்டாலின் பேசவில்லை; அதற்குள் மக்களே இந்த ஆட்சியால் களைத்துப் போய்விட்டார்கள் என்பதைத்தான் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

ஸ்டாலின் பேச்சை திட்டமிட்டு திரித்து பரப்புகின்றனர்: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
அனைத்து சர்வே எண்களுக்கும் சந்தை வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in