மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்

குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரத்தை அணிவித்தார் முதல்வர் விஜய்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஒரு குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து, ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற தாய்மார்களின் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஒரு குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து, ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற தாய்மார்களின் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்.

Updated on: 
2 min read

மதுரை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்தார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ‘தாய்மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அரசு சார்பில் இத்திட்டத்துக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தின் தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனையில் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக, விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 10.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார்.

பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்த முதல்வர், அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி பனகல் சாலையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காலை 11.45 மணிக்கு வந்தடைந்தார். வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்து விழா நடக்கும் கூட்டரங்குக்கு செல்ல பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வரைப் பார்த்த மக்கள், உற்சாக மிகுதியால் ஆரவாரம் செய்ததால், பேட்டரி காரில் இருந்து இறங்கிய முதல்வர், கூட்டரங்குக்கு நடந்தே சென்றார்.

அங்கு நடைபெற்ற நிகழ்வில், அர்ச்சனா தேவியின் குழந்தை முத்து யாழினி, ரமிலா பானுவின் குழந்தை முகம்மது சயின்ஷா, ஸ்டெல்லா மேரியின் குழந்தை ஜோனல் ஆகியோருக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்து, ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். குழந்தைகளைக் கையில் தூக்கிக் கொஞ்சினார்.

பின்னர், விழா மேடைக்குக் கீழே அமர வைக்கப்பட்டிருந்த 24 தாய்மார்களுடைய குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார். பின்னர், பிரசவ வார்டுக்கு சென்று, அங்குள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கும் மோதிரம் அணிவித்தார். சில தாய்மார்கள் கேட்டுக் கொண்டதால், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினார். அப்போது உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர்விட்ட பெண்ணை முதல்வர் விஜய் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். தாய்மார்கள், குழந்தைகளுடன் முதல்வர் விஜய் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: கடந்த 2025-ல் தேசிய அளவில் 1.40 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, தமிழகத்தில் பிரசவத்துக்காக ஒரு குடும்பம் சராசரியாக அரசு மருத்துவமனைகளில் ரூ.1,412-ம்,

தனியார் மருத்துவமனைகளில் ரூ.69,914-ம் செலவிடுவது தெரியவந்துள்ளது. அதாவது, அரசு மருத்துவமனையைவிட தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக 50 மடங்கு அதிகம் செலவிடுகின்றனர்.

ஒரு சாதாரண தொழிலாளியின் குடும்பம் மாத வருமானம், கடன், நகை அடமானம் போன்றவை மூலம் பிரசவச் செலவைச் சந்திக்கிறது. தங்க மோதிரத்துக்காக பிரசவத்துக்கு மக்கள் அரசு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. தாய்மையைக் கொண்டாடுவது, அரசு மருத்துவச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது, அரசு மருத்துவமனையை நம்பகமான, பாதுகாப்பு மையமாக முன்னிறுத்துவது, தரமான தாய்-சேய் மருத்துவச் சேவையை ஒவ்வொரு குடும்பத்துக்கும் சமமாக கிடைக்கச் செய்வது போன்றவையே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.

முதல் கட்டமாக 1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்து தயார்நிலையில் உள்ளன. மொத்தம் 4.42 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்ய அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், விஸ்வநாதன், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், கல்லாணை, கருப்பையா, தங்கப்பாண்டியன், சுகாதாரத் துறைச் செயலர் தாரேஸ் அகமது, மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையர் கவுரவ்குமார், டீன் அருள் சுந்தரேஷ்குமார் பங்கேற்றனர்.

முதல்வர் தொடங்கி வைத்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் தவிர்த்து தமிழகம் முழுவதும் 102 மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் பணி தொடங்கியது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் நேற்று காலை 7 மணி வரை பிறந்த 1.07 லட்சம் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படுகிறது.

<div class="paragraphs"><p>மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஒரு குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து, ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற தாய்மார்களின் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்.</p></div>
யாருக்காவது ரூ.2,500 வந்திருக்கிறதா? - தவெக தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு பிரேமலதா கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in