

மதுரை: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் இன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க முதல்வர் விஜய் இன்று மதுரை வருகிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று (செப்.28) இந்த விழா நடைபெறுகிறது.
முதல்வர் வருகையை முன்னிட்டு ராஜாஜி மருத்துவமனை பகுதியே விழாக் கோலம் பூண்டுள்ளது. மாநகர பகுதிகளில் முதல்வர் வந்து செல்லும் சாலைகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று புதுப்பொலிவு பெற்றுள்ளன.
விழா நடைபெறும் கூட்டரங்கில் தமிழக சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அரசு மருத்துவமனை உயர் அதி்காரிகள் கூறியதாவது: அரசு மருத்துவமனை கூட்டரங்கில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் இன்று பகல் சுமார் 12 மணிக்கு மருத்துவமனைக்கு வருகிறார். அவர், கூட்டரங்கில் 27 குழந்தைகள், பிரசவ வார்டில் உள்ள 10 குழந்தைகள் என மொத்தம் 37 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார்.
இத்திட்டத்தில் கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்வர் வருகையால் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோருக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வழக்கம் போல பிரதான நுழைவுவாயிலில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் அவசர ஊர்தி வாகனங்கள் வந்து நிற்கும் ‘பார்க்கிங்’ மட்டும் விழா நடைபெறும் ஒரு நாள் அருகில் உள்ள புற நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் பணியாற்றுவோருக்குத் தனியாக ‘பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வருவோர் தவிர மற்றவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விழா நிறைவு பெற்றதும் தொடர்ந்து முதல்வர் விஜய், புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துப் பார்வையிடுகிறார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அங்கு உள்ளூர் அமைச்சர்கள், தவெக எம்எல்ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மாலை 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து அவர் சென்னைக்குப் புறப்படுகிறார்.
முதல்வர் ‘ரோடு ஷோ’ - தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்க, முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சுமார் 11 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோயில் வரை, முதல்வர் காரில் செல்லும் சாலையின் இருபுறத்திலும் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அவரைப் பார்ப்பதற்காகப் பெருமளவில் திரள்வார்கள் என்பதால் அவர்களுடைய வரவேற்பை முதல்வர் ஏற்க ‘ரோடு ஷோ’வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகச் சாலையின் இருபுறத்திலும் சவுக்கு மரக்கம்புகள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறியதாவது: விமான நிலையம் உள், வெளிப்பகுதி, நுழைவு வாயில், வாகனக் காப்பகம் என 5 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் வருகைக்கு முன்பாக பாதுகாப்பை இறுதி செய்யும் தனிப்பிரிவு (அட்வான்ஸ் செக்யூரிட்டி போர்ஸ்) எஸ்.பி. மதன் தலைமையிலான குழுவினர் விமான நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி அருங்காட்சியகம், சுற்றுலா மாளிகை, மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் ஆய்வு செய்து சில அறிவுரைகளை வழங்கினர். அதன்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையம், விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட முதல்வர் வரும் வழித்தடங்கள், அரசு மருத்துவமனை, காந்தி அருங்காட்சியகம், அரசு சுற்றுலா மாளிகை, மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் வருகைக்காக நகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறினார்.