

கரையான் அரித்த ரூபாய் நோட்டுகள்.
நாகப்பட்டினம்: நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வமுருகன். எலெக்ட்ரீசியனான இவர், சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை வீட்டிலுள்ள மர அலமாரியில் சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில், வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவதற்காக பணத்தை எடுக்க 2 தினங்களுக்கு முன் அலமாரியைத் திறந்தபோது, அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் முழுவதையும் கரையான்கள் அரித்து சேதப்படுத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மொத்தம் ரூ.4 லட்சத்து 88 ஆயிரம் சேதமாகி இருந்தது. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாகையில் உள்ள வங்கிகளை அணுகியபோது, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியை அணுகியபோது, சீரியல் எண்கள் இல்லாத நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும், முழுத் தொகையும் கிடைக்கும் என உறுதியளிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டதாக செல்வமுருகன் கூறினார்.
பெற்றோரை இழந்து தனியாக வசித்து வரும் நிலையில், உழைத்துச் சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமிக்காமல் வீட்டில் வைத்திருந்ததால் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.