

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட கால்நடை மருத்துவர்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம், ரூ.63 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ஒரு சில நாட்களில் பூமிபூஜை நடத்தி பணிகள் தொடங்க உள்ளதால், ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டத் தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும்.
உலகப் புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பொங்கல் பண்டிகை நாட்களில் மதுரையில் அதிகளவில் கூடுவர்.
பொங்கல் பண்டிகை நாளில் ஜன.15-ம் தேதி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்திலும், மறுநாள் 16-ம் தேதி பாலமேடு, 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறும்.
அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் பாலமேடு, அலங்காநல்லூர் போல் போட்டி நடத்துவதற்கு வாடிவாசல், பார்வையாளர் மாடங்கள் நிரந்தரமாக கிடையாது.
அதனால், ஒவ்வொரு ஆண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரி வாடிவாசல், பார்வையாளர் மாடங்கள், மாடுகள் சேகரிக்கும் இடம் போன்ற அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆணையர் சித்ரா முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடு களை மேற்கொள்ள மாநகராட்சி ரூ.63 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சி நிர்வாகம் ஓரிரு நாளில் வேலைக்கான ஆணையை வழங்கி அமைச்சர்கள் முன்னிலையில் பூமி பூஜை செய்ததும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுப் பணிகள் தொடங்கிவிடும்.
வாடிவாசல், விழா மேடை, வாடிவாசலில் இருந்து 1,500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும் மரத்தடுப்பு வேலிகள், மாடுகள் மருத்துவப் பரிசோதனை செய்யும் இடம், மாடுகள் சேகரிக்கும் இடம், பார்வையாளர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்றவை மேற்கொள்ளப்படும்.
காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 700 முதல் 800 காளைகள் பங்கேற்கும். இப்போட்டிக்குத் தகுதியான காளைகளைத் தேர்வு செய்வதற்காக காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை நேற்று முதல் அவனியாபுரத்தில் தொடங்கியது.
அரசு கால்நடை மருத்துவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அழைத்து வரும் காளைகளைப் பரிசோதனை செய்து, அவற்றுக்கு உடல் தகுதிச் சான்று வழங்கத் தொடங்கினர்.
காளை உரிமையாளர்கள் இந்த உடல் தகுதிச்சான்றுடன் விரைவில் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் வலைதளத்தில், போட்டியில் பங்கேற்பதற்கு முன்பதிவு செய்யத் தொடங்குவார்கள். மாவட்ட நிர்வாகம், குலுக்கல் முறையில் காளைகளுக்கு ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான ‘டோக்கன்’களை விநியோகம் செய்யும்.