

சென்னை: லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினே முதல்வர் ஆவார் என முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்குத் தள்ளி விஜய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். தவெக தலைவர் விஜய்க்கு இரண்டாம் இடமும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 3-ஆம் இடமும், சீமானுக்கு 4-ஆம் இடமும், அண்ணாமலைக்கு 5- ஆம் இடமும் கிடைத்துள்ளது.
தவெகவால் யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துக் கணிப்பின் முடிவில், திமுகவுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக விசிக, அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், தவெகவால் நாம் தமிழர் கட்சிக்கு சொற்ப அளவே பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது.
புதிய வாக்காளர்களை கவரும் இளம் தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பில் விஜய்க்கு முதல் இடமும், அண்ணாமலைக்கு 2-ஆம் இடமும், உதயநிதிக்கு 3-ஆம் இடமும், சீமானுக்கு 4-ஆம் இடமும் கிடைத்துள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்புக்காக நகரங்களில் 54.8% பேரிடமும், கிராமங்களில் 41.3 சதவீதம் பேரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்துக் கணிப்பு 234 தொகுதிகளிலும் 81,375 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் 21 முதல் 30 வயதினர் 25.6 சதவிகிதம் பேரிடமும், 46 முதல் 60 வயதினர் 23.5 சதவிகிதம் பேரிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 41.3 சதவிகிதம் பேர் 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கருத்துக் கணிப்பில் 81.71 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்றும், 10.55 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள் என்றும், 7.75 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.