

சென்னை: ஆவின் நிர்வாகம் அம்பத்தூரில் உள்ள தனது தயாரிப்புப் பண்ணையில் இனிப்புகளைத் தயாரிக்கும் ஒப்பந்த வேலைக்கான புதிய இ-டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒரு வருட காலத்திற்கான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 28.50 டன் காஜூ கத்லி, முந்திரி–பிஸ்தா ரோல் ஆகியவற்றைத் தயாரித்து வழங்க ரூ.36.48 லட்சமும், 27.75 டன் முந்திரி அல்வா, நெய் பாதுஷா ஆகியவற்றைத் தயாரித்து வழங்க ரூ.35.52 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் நிர்ணயித்த தரம் மற்றும் அளவுகளின்படி இனிப்புகளைத் தயாரித்து, பொட்டலமிட்டு வழங்க வேண்டும் என டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் ரூ.36 ஆயிரம் முன்பணமாக ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் நவம்பர் 9-ம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 28-ம் தேதி இதற்கான விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், தொழில்நுட்பப் படிவங்கள் நவம்பர் 10-ம் தேதி மாலை 3 மணிக்குத் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
நிபந்தனை: இந்த ஒப்பந்தப் பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 தொழிலாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், இபிஎஃப் மற்றும் இஎஸ்ஐ போன்ற சட்டப்பூர்வப் பதிவுகளைப் பெற்றிருக்க வேண்டும் எனவும், இனிப்புகள் தயாரிப்பை முறையாக மேற்பார்வையிட சமையல் கலை தொழில் நுட்பத்தில் டிப்ளமோ அல்லது பட்டயப் படிப்பு முடித்த தகுதியான தலைமைச் சமையல்காரர் மற்றும் துணைச் சமையல்காரர் ஆகியோரை நியமிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒப்பந்ததாரர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் (FSSAI) விதிமுறைகளின்படி தங்களின் பணியாளர்களுக்கு மருத்துவத் தகுதிச் சான்றிதழ்களைப் பெற வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் tntenders.gov.in என்ற அரசு இணையதளம் மூலம் இந்த இ-டெண்டரில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.