“பயிர் காப்பீடு திட்டத்தில் குத்தகை விவசாயிகளும் பயன் பெறலாம்” - அமைச்சர் வினோத் தகவல்

“பயிர் காப்பீடு திட்டத்தில் குத்தகை விவசாயிகளும் பயன் பெறலாம்” - அமைச்சர் வினோத் தகவல்
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகளும் பதிவு செய்து பயன் பெறலாம் என்று வேளாண் துறை அமைச்சர் ர.வினோத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நடப்பாண்டில் (2026-2027) சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதி டிச.1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனினும், தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் 2026-2027 ஆண்டு சம்பா பருவம் முதல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் நில உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள விவசாயி அடையாள எண்ணும் (FID), குத்தகை விவசாயிகள் பதிவு செய்து கொள்ள நில உரிமைதாரர்களிடமிருந்து ஆதார் அடிப்படையிலான ஓடிபி ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டது.

பேரூராட்சி, நகராட்சி, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களும், தனியார் மற்றும் கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகளாலும், இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்வதில் இடர்பாடுகள் இருந்தன.

இதைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் உயர் அலுவலர்கள் அடங்கிய குழு, மத்திய அரசை நேரில் சந்தித்து, தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப இடர்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தது. மேலும், குத்தகை விவசாயிகள், மலைப்பகுதி மற்றும் நகர்புற விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எவ்வித சிரமமுமின்றி இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறும் வகையில், விவசாயி அடையாள எண் மற்றும் ஆதார் அடிப்படையிலான ஓடிபி ஒப்புதல் பெறுதல் ஆகியவை கட்டாய நிபந்தனைகளிலிருந்து உரிய விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, குத்தகைதாரர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து பயனடையலாம் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

“பயிர் காப்பீடு திட்டத்தில் குத்தகை விவசாயிகளும் பயன் பெறலாம்” - அமைச்சர் வினோத் தகவல்
“தவெகவும் பாலியல் குற்றங்களும் என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம்” - தினகரன் விமர்சனம்

X