

அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: அக்டோபர் மாதத்தில் படிப்பை முடிக்கும் அரசு முதுநிலை மருத்துவர்களின் நலனைக் கருதி, தற்காலிகத் தீர்வாகவே பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர்வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-ம் ஆண்டு அக்டோபரில் முதுநிலை படிப்பு முடித்த மருத்துவர்களுக்கான கலந்தாய்வு டிசம்பரில்தான் நடைபெற்றது. இடைப்பட்ட 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்குவது மற்றும் இதர பணி சார்ந்த நடைமுறைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
இவ்வாறான அட்டவணை மாறுபாட்டினால், இந்த ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மருத்துவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக உடனடித் தீர்வாக பணி மாறுதல் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்கள்கூட மருத்துவர்கள் தாங்கள் அளித்த படிவத்தில் குறிப்பிட்ட3 விருப்ப இடங்களின் அடிப்படையிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருவேளை அவர்கள் கோரிய இடங்களில் காலிப்பணியிடம் இல்லை என்றால், அவர்களுக்கு அருகாமையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த தற்காலிக ஏற்பாட்டினால் அரசு மருத்துவர்கள், பணிக்குச் சேர்ந்த முதல் மாதத்திலேயே சம்பளம் எவ்வித தடையுமின்றி கிடைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உடனடியாக வெளியிடும்.
தற்காலிகமாக நிரப்பப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் அடுத்து வரக்கூடிய கலந்தாய்வில் அறிவிக்கப்படும். பணிமூப்பு அடிப்படையில் மிக விரைவில் வெளிப்படையான கலந்தாய்வு நடத்தப்படும். அதில், தங்கள் தகுதி மற்றும் பணிமூப்பு உரிமை அடிப்படையில் விருப்பமான பணியிடங்களைத் தேர்வு செய்ய முழுமையான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.