

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தீர்த்த பாலீஸ்வரர் கோயிலில் இரவு நேர காவலாளியாக பாபு என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 2021 ஜூன் 17-ம் தேதி கோயில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டதை தடுக்க முயன்றபோது திருடர்களால் கொலை செய்யப்பட்டார்.
அதையடுத்து அறநிலையத்துறை சார்பில் இறந்த பாபுவின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. தனது கணவரின் மரணத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி அவரது மனைவி ஸ்ரீதேவி அறநிலையத்துறை மற்றும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு எதிராக சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் அறநிலையத் துறை தரப்பில், கோயில் கொள்ளையை தடுக்க முயன்ற இரவு நேர காவலாளி பாபு தங்களது நேரடி ஊழியர் அல்ல என்றும், தனியார் நிறுவன ஊழியர் என்றும், ஆகவே சட்டரீதியாக இழப்பீடு கோர முடியாது, என வாதிடப்பட்டது.
அதை நிராகரித்த தொழிலாளர் நல நீதிமன்றம், தொழிலாளர் இழப்பீட்டு சட்டப்படி, கோயிலும் தொழில் நிறுவனம்தான். ஆகவே இறந்த ஊழியரின் மனைவி தாக்கல் செய்த இழப்பீட்டு மனு விசாரணைக்கு உகந்தது எனக்கூறி ஏற்றுக் கொண்டது.
இதை எதிர்த்து கோயில் செயல் அலுவலர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், இழப்பீடு கோரி ஸ்ரீதேவி தாக்கல் செய்துள்ள மனுவை தொழிலாளர் நல நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் விசாரித்து தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டு கோயில் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.