

மாரிமுத்து விசாரணைக்காக ஆஜர்
திண்டுக்கல்: பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து விசாரணைக்காக அறநிலையத்துறை ஆவணங்களுடன் எஸ்.பி., சாஜிதா முன்னிலையில் ஆஜரானார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்யப்பட்டது
இதுகுறித்து பழநி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்தப் புகாரில் திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பழநியில் உள்ள பிரச்சினைக்குரிய இடம் உள்ள பகுதி, பழநி பத்திரப்பதிவு அலுவலகம் சென்று சிபிசிஐடி எஸ்.பி., சாஜிதா நேரில் விசாரணை நடத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி சாஜிதா, புகார்தாரர் முருகானந்தம் உள்ளிட்ட அறநிலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினரிடம் விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியில் உள்ள, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு சொந்தமான வீடு, விழுப்புரத்தில் உள்ள நிலத்தை விற்ற முருகதாஸ் வீடு ஆகியவற்றில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.
விசாரணையின் தொடர்ச்சியாக இன்று செவ்வாய்கிழமை திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து காலையில் எஸ்பி சாஜிதா முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.
இவரைத் தொடர்ந்து பழநி கோயில் கண்காணிப்பாளர் முருகானந்தம், அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன், கோயில் செயல் அலுவலர் கணபதி உள்ளிட்ட அறநிலைத்துறையில் பணிபுரியும் பல்வேறு அலுவலர்களும் விசாரணைக்கு ஆஜராகினர். நிலம் குறித்து அறநிலையத்துறை தங்களிடம் உள்ள ஆவணங்களை அறநிலையத்துறை ஊழியர்கள் விசாரணைக்கு எடுத்துச்சென்றனர்.
மேலும் வருவாய்த்துறையில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது பழநி கோயிலில் பணிபுரியும் மாரியப்பன், சின்னச்சாமி ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிபிசிஐடி போலீஸார் பல பிரிவுகளாக பிரிந்து பழநியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவற்றில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பழநி கோயில் நில மோசடி தொடர்பாக விசாரணை 6-வது நாளாக தொடர்கிறது.