தவெக எம்எல்ஏ நடவடிக்கையால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க ஐகோர்ட் உத்தரவு

உயர் நீதிமன்றம், மதுரை.
உயர் நீதிமன்றம், மதுரை.
Updated on
1 min read

மதுரை: திருச்சி துறையூரில் தவெக எம்எல்ஏ உத்தரவிட்டால் துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் மின் இணைப்பை மீண்டும் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி துறையூரைச் சேர்ந்த ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

துறையூரில் எனக்கு சொந்தமான 702.5 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தில் அரசு நிலம் எனக் கூறி அத்துமீறி நுழைய முயன்றனர். இந்த நிலத்தின் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்றும், அதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தலையிடக்கூடாது எனவும் 1995-ல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றேன்.

இந்நிலையில் என் பக்கத்து வீட்டில் வசிக்கும் திமுக வார்டு உறுப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு என் இடத்தின் மின் இணைப்பை துண்டிக்க துறையூர் தவெக எம்எல்ஏ ரவிசங்கர் வாய்மொழியாக உத்தரவிட்டார்.

இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இடத்தை 3 நாட்களில் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து நிலம் தொடர்பா ஆவணங்களை பார்வையிடாமல் 3 நாட்களில் இடத்தை காலி செய்ய எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 நாட்களில் இடத்தை காலி செய்யாவிட்டால் ஆட்களை அனுப்பி தகரக் கொட்டைகளை அகற்றுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே, இடத்தை காலி செய்ய அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு விசாரித்தது.  மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ஆர்.சீனிவாசன் வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள், மனுதாரர் இடத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்கவும், 3 நாட்களில் இடத்தை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸுக்கு இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிடப்படுகிறது. மனு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

உயர் நீதிமன்றம், மதுரை.
தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in