

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள், திட்டங்கள், பணி முன்னேற்றம் மற்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்படவுள்ள புதிய அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது: பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் முக்கிய கோயில்களில் இணையவழி நுழைவுச் சீட்டு முறையை உறுதிப்படுத்த வேண்டும். முன்பதிவு தரிசன சீட்டுகள் வழங்குவதில் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கென தனி சிறப்பு தரிசன வரிசைகளை ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் கோயில்களில் பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகளை கட்டுவதற்கு முறையான வரைவுத் திட்டங்களை உடனடியாகத் தயாரித்து அனுப்ப வேண்டும்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்குத் தேவையான அடிப் படை வசதிகளை போர்க்கால அடிப்படையில்செய்ய வேண்டும். கோயில்களில் காலியாக உள்ள பரம்பரை சாரா அறங்காவலர்களை நியமிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
பழுதடைந்த நிலையில் உள்ள திருத்தேர்களைப் பொதுமக்கள், நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் சீரமைத்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் அளவு மற்றும் விலைப்பட்டியல் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில், கோயில்களில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமையிடத்துக்கு முன்கூட்டியே அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.