

சென்னை: நேர்காணல் உடைய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிடுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிவிப்பு தொடர்பான முழு விவரங்களையும் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.
அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்து வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், நேர்காணல் உடைய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பு ஆக.31-ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெறும் என தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிவிப்பு தொடர்பான முழு விவரங்களையும் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.
என்னென்ன பதவிகள்? - அரசு பொதுத் துறை நிறுவனங்களின் உதவி மேலாளர், துணை மேலாளர், தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், வேளாண் உதவி இயக்குநர், புள்ளியியல் துறை உதவி இயக்குநர், நகர் மற்றும் ஊரமைப்பு உதவி இயக்குநர், தொழில் வணிகத் துறை உதவி இயக்குநர், கூட்டுறவு தணிக்கைத்துறை உதவி இயக்குநர், மீன்வளத் துறை உதவி இயக்குநர், சிப்காட், டிட்கோ உதவி பொதுமேலாளர், அரசு போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் (சட்டம்), தோட்டக்கலை உதவி இயக்குநர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட நூலக அலுவலர், ஆவின் மேலாளர் (கால்நடை மருத்து
வம்), தலைமைச் செயலக செய்தியாளர், மாவட்ட சுற்றுலா அலுவலர் உள்ளிட்ட பதவிகள் நேர்காணல் உடைய பதவிகளுக்கான தொழில்நுட்ப பணிகள் தேர்வின்கீழ் வருகின்றன.
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 330 காலியிடங்கள் இடம்பெற்றிருந்தன.
அரசுத் துறைகளில் அதிக காலியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை விரைந்து நிரப்பவேண்டும் என பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இன்று அறிவிக்கப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் காலிஇடங்கள் 500-க்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.