

கோப்புப் படம்
கோவில்பட்டி/ தென்காசி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவில்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட பிள்ளையார்நத்தம், இளையரசனேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கு தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் சங்கரன் கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை (28-ம் தேதி) நடைபெற உள்ளது. வெளிமாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் பணி ஒதுக்கீடு பெற்றுள்ள ஆசிரியைகள் 3 கட்ட பயிற்சி வகுப்புகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.
தொடர்ந்து ஏப்.22, 23-ம் தேதி தேர்தல் பணி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லும் வரை மையத்தில் காத்திருக்க வேண்டும். நள்ளிரவு நேரம் வந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றால், அதன் பின்னர் ஆசிரியைகள் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்படும். எனவே, சொந்த மாவட்டங்களிலேயே உள்ள தொகுதிகளில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் ராணுவவீரர் அ.ஜெயப் பிரகாஷ் நாராயணசாமி கூறியதாவது: கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களில் ஆசிரியைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட வரம்புக் குள் தேர்தல் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு தேர்தல் பணி செய்தனர்.
தற்போது சட்டப்பேரவை தேர்தலில் பணி தென்காசி மாவட்ட வரம்புக்குள் இணைக்கப்பட்டு தேர்தல் பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியைகள் பயிற்சிக்காக சுமார் 40 கி.மீ. அலைய வேண்டும்.
எனவே, இதற்கு முன்பு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்தபடியே இந்தாண்டும் தூத்துக்குடி மாவட்ட வரம்புக்குள் தேர்தல் பணி வழங்க உரிய ஆவண செய்ய வேண்டும். தென்காசி மாவட்டத்தில் வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
ஆனால், இந்த தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், அரசு அலுவலக எழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை தென்காசி மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து பணி ஒதுக்கீட்டை வரைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இதற்கிடையே, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.கலை உடையார் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில்,, ‘‘பிள்ளையார்நத்தம், இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கு தென்காசி ஆட்சியரால் தேர்தல் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டம் விட்டு மாவட்டம் தேர்தல் பணி யாற்றும் இந்த நிலை பள்ளி ஆசிரியர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்துக்குள் தேர்தல் பணியாணை வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.