பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை: இடைநிலை ஆசிரியர் போராட்டம் தொடர்வதாக அறிவிப்பு

கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ), கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 11-வது நாளாக ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகளும் திறக்கப்பட்டன. எனினும், ஆசிரியர்கள் பலர் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் மாற்று ஏற்பாடுகளை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களும் ஏற்பாடு செய்திருந்தன. எனினும், சில பகுதிகளில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் நேற்று டிபிஐ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, எஸ்எஸ்டிஏ பொதுச்செயலர் ஜே.ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எங்கள் கோரிக்கையை உரிய ஆதாரங்களுடன் எடுத்து முன்வைத்தோம். அதற்கு டெல்லி சென்றுள்ள துறையின் செயலர் சந்திரமோகன் சென்னை திரும்பியதும் அவருடன் கலந்து பேசி பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதுவரை அமைதியான முறையில் எங்களின் போராட்டம் தொடரும். காவல் துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அதேநேரம், கோரிக்கை நிறைவேறும் வரை களத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை. எங்கள் ஊதிய முரண்பாடு பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு எட்டப்படும் என உறுதியாக நம்புகிறோம். நாங்கள் விடுமுறையில் மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், இந்த முறை பள்ளிகள் திறக்கப்பட்டும் வகுப்பறைக்குச் செல்ல முடியாத நிலைக்காக மாணவர்கள், பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் மீண்டும் பள்ளிக்குத் திரும்பி முழு வீச்சில் கற்றல், கற்பித்தலில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
திருச்சியில் களைகட்டிய ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ - அமித் ஷா வாழ்த்து ‘மிஸ்’ ஆனதால் பெண்கள் அதிருப்தி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in