

தமிழக பாஜக சார்பில் அமித் ஷா தலைமையில் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெற்ற மோடி பொங்கல் விழா.
படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: தமிழக பாஜக சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ மன்னார்புரம் ராணுவ மைதானத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமித் ஷா, அங்கிருந்த பெண்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லாமல் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பின்னணியில் அமித் ஷாவின் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’வுக்காக மைதானம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, நுழைவுவாயிலில் அலங்காரத் தோரணம் கட்டப்பட்டிருந்தது. பொங்கல் வைப்பதற்காக பெண்கள் காலை 8 மணிக்கே வந்திருந்தனர்.
1,008 பேர் பொங்கல் வைக்க ஏதுவாக மைதானம் 50 பாக்ஸ்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாக்ஸிலும் 20 பேர் பொங்கல் வைக்க பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் 7-க்கு 7 அளவிலான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு சிமென்ட், செங்கல் அடுப்பு இருந்தது.
பெண்களுக்கு பொங்கல் வைக்கத் தேவையான சில்வர் பானை, விறகு, 250 கிராம் பச்சை அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரை, நெய், 3 லிட்டர் தண்ணீர் மற்றும் 3 கரும்பு, குடிப்பதற்கு 250 மில்லி பாதாம் பால், வாழைப்பழக் கேக் ஆகியவை வழங்கப்பட்டன.
விழா மேடையின் பக்கவாட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்தப்பட்டிருந்தன. மேடைக்கு இடது புறம் பசுமாடு கன்றுடன் நிறுத்தப்பட்டிருந்தது. பெண்கள் பட்டு புடவை அணிந்து, குடும்பத்தினருடன் வந்திருந்ததனர்.
மேடையின் இருபுறமும் காளை அடக்கும் வீரர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. விழா மேடை முழுவதும் வாழை மரம் மற்றும் கரும்புகள் கட்டப்பட்டிருந்தன. பெண்கள் கோலமிட்டு பொங்கல் வைத்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 12.20 மணிக்கு விழா நடைபெற்ற மைதானத்துக்கு வந்தார். மேடைக்கு வலதுபுறம் அவரது கான்வாய் வந்ததும் காரிலிருந்து இறங்கிய அமித்ஷா, சிறிது தூரம் நடந்து சென்று திரளாக பெண்கள் பொங்கல் வைப்பதை கண்டு ரசித்தார்.
விழா மேடையிலிருந்து 20 அடி நீளத்துக்கு ரேம்ப் அமைக்கப்பட்டு அங்கு பொங்கல் வைக்க சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு முன்பு வந்த அமித் ஷாவுக்கு அர்ச்சகர்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்தனர்.
அதை ஏற்றுக் கெண்டு, விழா மேடை முன்பிருந்த சிறிய திறந்தவெளி மேடை மீது ஏறினார். அங்கு பெரிய பொங்கல் பானையில் ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொங்கலை கிண்டினார். பின்னர் அங்கிருந்து பொங்கல் விழாவுக்கு வந்தவர்களை பார்த்து கையசைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றார்.
’மிஸ்’ ஆன வாழ்த்து! - விழாவுக்கு வந்த ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள், “விழாவுக்கு வந்தவர்களுக்கு சரியாக உணவு வசதி செய்து தரவில்லை. குறிப்பிட்ட நேரம் மட்டுமே காலை உணவு வழங்கினர். பொங்கல் வைக்க ஒரு வீட்டிலிருந்து 4 பேர் வரை வந்துள்ளனர். ஆனால் ஒருவருக்கு மட்டும் தேவையான கேக், பாதாம் பால் வழங்கினர்.
பெண்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொங்கல் வைத்தனர். மேடைக்கு வலது புறம் இருந்த குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே அமித் ஷா பார்வையிட்டார். மேலும் மேடையேறி பொங்கல் வாழ்த்து சொல்வார் என அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் பொங்கல் வாழ்த்து கூறாமல் சென்றது வருத்தமாக உள்ளது” என்றனர்.
‘அதிருப்தியில் அமித் ஷா’ - இதுகுறித்து பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் , “அமித் ஷா மேடையில் இருந்தவர்களிடம் வாழ்த்து கூறினார்.” என்றார்.
இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ‘விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவதாக இருந்தார். தமிழகத்தில் கூட்டணி அமைவதில் சரியான முன்னேற்றம் இல்லாததால் அமித் ஷா கோபத்தில் உள்ளார். அதனால் அவர் பேசாமல் சென்றிருக்கலாம்” என்றனர்.
இதனிடையே, வெயிலின் தாக்கத்தால் வயலூரைச் சேர்ந்த நாகஜோதி (30) என்றப் பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் தூக்கிச் சென்று அங்கிருந்த முதலுதவி மையத்தில் முதலுதவி அளித்தனர். மேடையிலிருந்த தமிழிசை சவுந்தராஜன் உடனடியாக கீழே இறங்கி வந்து அப்பெண்ணுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்.
விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், அர்ஜுன் மேக்வால், மூத்தத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மாநிலத் தலைவர் கவிதா, துணைத் தலைவர் புவனேஸ்வரி, மாவட்டத் தலைவர் மலர்கொடி, திருச்சி பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.