

சென்னை: செயற்கை சுவையூட்டும் பொருள்கள் சேர்க்கப்பட்டதால் 11 வகையான மதுபானங்களின் விற்பனைக்கு தடை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, பீர், ஒயின் உள்ளிட்ட மது வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை 10-க்கும் மேற்பட்ட மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் செயல்படும் என்ரிகா எண்டர்பிரைசஸ் மதுபான ஆலையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நடத்திய சோதனையில் 10 பிராந்தி மற்றும் ஒரு ரம் வகை மதுபானத்தில் செயற்கை சுவையூட்டும் பொருள்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது குறித்து அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நந்தகுமார் எழுதிய கடிதத்தின் விவரம்: எஃப்எஸ்எஸ்ஏஐ தென் மண்டல அதிகாரிகள் என்ரிகா எண்டர்பிரைசஸ் மதுபான ஆலையில் நடத்திய சோதனையில் வி.எஸ்.ஓ.பி எக்ஸா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டவல்ஸ் வி.எஸ்.ஓ.பி பிராந்தி, நம்பர் 1 மெக் டவல்ஸ் ஃபைன் பிராந்தி, மேன்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனிபீ ஃபைன் பிராந்தி, என்ரிகா வி.எஸ்.ஓ.பி செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி, என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய மதுபானங்களில் செயற்கை சுவையூட்டும் பொருள்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துமாறும், தயாரிப்புகளை நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டுள்ளது.
எனவே இந்த 11 வகை மதுபானங்களை குடோனிலிருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் எஃப்எல்-2 மற்றும் எஃப்எல்-3 உரிமம் பெற்றவர்களுக்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளில் இந்த 11 வகை மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.