

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 2,700 கடைகள் பார் வசதியுடன் செயல்படுகின்றன. டெண்டர் மூலம் ஒப்பந்தம் பெற்று தனி நபர்கள் இவற்றை நடத்தி வருகின்றனர். கடைசியாக, கடந்த 2023-ம் ஆண்டு பார்களுக்கான டெண்டர் விடப்பட்டு, அதன் ஒப்பந்தக் காலம் கடந்த 2025 டிச.31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, புதிய டெண்டர் விடப்படாமல், ஒப்பந்தக் காலம் 6 மாதம் (ஜூன் 30 வரை) நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக புதிய டெண்டர்கள் கோர அவகாசம் இல்லாததால், பார்களின் உரிமம் மீண்டும் 2 மாதங்களுக்கு (ஆக.31 வரை) நீட்டிக்கப்பட்டது.
மேலும், பார் டெண்டர் விதிகளில் மாற்றங்களை செய்து புதிய டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், பார்களை நவீன முறையில் மேம்படுத்தி, உணவுப் பொருட்கள் விற்பனையிலும் பல மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போதும் புதிய டெண்டர் அறிவிக்கப்படாத நிலையில், பார்களுக்கான உரிமத்தை டாஸ்மாக் நிர்வாகம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: ஆக.31-ம் தேதியுடன் (நாளை) பார் உரிமம் காலாவதியாகும் நிலையில், செப்.1 முதல் அக்.31-ம் தேதி வரை உரிமம் நீட்டிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக புதிய டெண்டர் பணிகள் முடித்து ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டால் புதிய உரிமத்தில் பார்கள் செயல்படும்.
புதிய டெண்டருக்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆனால், டெண்டர் பணிகள் முழுமையாக முடிந்து ஒப்பந்தம் இறுதி செய்ய தாமதம் ஆகலாம் என்பதால் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
உரிமத்தை நீட்டித்து, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து உரிமத் தொகையைப் பெற அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காலி பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தமும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.