

சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு, ‘இசட்’ பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய சுழற்சி முறைப் படை வீரர்களும், அதிநவீனப் பாதுகாப்பு வாகனங்களும் அவரது தீவிரப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகதோல்வி அடைந்து ஆட்சி அதிகாரத்தை இழந்தது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினும் தோல்வியைத் தழுவினார். ஆட்சி அதிகாரத்தை இழந்த போதிலும், அவருக்குத் தொடர்ந்து ‘இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பே தொடரப்பட்டு வந்தது.
அச்சுறுத்தல் நிலை மறு ஆய்வு: இதற்காகத் தினமும் சுமார் 50 கமாண்டோ மற்றும் சிறப்புப் பிரிவு போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். பொதுவாக, ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் பதவியை இழக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கான அச்சுறுத்தல் நிலையை மறுஆய்வு செய்து பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவது வழக்கமான நடைமுறை.
அந்த வகையில், தமிழகத்தில் வசிக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அந்த அறிக்கையை பரிசீலித்த அரசு, மு.க.ஸ்டாலினுக்கான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை ‘இசட்’ பிரிவாக குறைத்துள்ளது. இப்பிரிவில் மொத்தம் 22 காவலர்கள் வரை பணியில் இருப்பார்கள்.
பாதுகாப்பு குறைக்கப்பட் டதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டை செனடாப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உடனடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முன்பு, இல்லத்துக்குச் செல்லும் 4 முக்கிய நுழைவுவாயில்களிலும் போலீஸார் சுழற்சி முறையில் நிறுத்தப்பட்டுத் தீவிர சோதனைகளுக்குப் பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழக அரசு மீது விமர்சனம்: தற்போது பாதுகாப்பு குறைப்பால், 2 நுழைவுவாயில்கள் மட்டுமே பயன்பாட்டில் வைக்கப்பட்டு, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரின் எண்ணிக்கை 10-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை திமுக-வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே புதிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டி, திமுக-வினர் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைதளங் களில் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர்.