வணிக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற தவாக வலியுறுத்தல்

வணிக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற தவாக வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ‘வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுதவிர, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்’ என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள தமிழக மக்களின் மீது, வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மேலும் பல்வேறு சுமைகளைத் திணிக்கிறது.

வணிக சிலிண்டர் விலை உயர்வு ஓட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட சிறு மற்றும் குறு வணிகர்களின் செயல்பாட்டுச் செலவை அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக உணவு மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விலைகள் உயர்ந்து, இறுதியில் அதன் முழு சுமையும் பொதுமக்களின் தலையிலேயே விடியும்.

எனவே, வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை உடனடியாகவும் முழுமையாகவும் திரும்பப் பெற வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களின் நலன் கருதி வணிக எல்பிஜி சிலிண்டருக்கு நிலையான மானியம் வழங்குவதற்கான நிரந்தரத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அவசர விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இடைக்கால நிவாரண நிதியுதவி மற்றும் உற்பத்தி ஊக்கத்தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்று தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற தவாக வலியுறுத்தல்
“கண்ணீர் சிந்த மாட்டோம்... உறுதியுடன் போராடுவோம்!” - நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in