

பத்மஸ்ரீ விருதாளர்கள் (இடமிருந்து) சாமிநாதன், கிருஷ்ணன், ராஜா ஸ்தபதி, பழனிவேல், பக்தவத்சலம், புண்ணியமூர்த்தி.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 14 பேருக்கு பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு எஸ்கேஎம் குழும நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் எஸ்கேஎம். மயிலானந்தனின் சமூக சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இவர் 2013-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
ஈரோடு மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1945-ல் பிறந்த மயிலானந்தன் பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். 1983-ல் கோழிப்பண்ணையாளர்கள் நலச் சங்கத்தைத் தொடங்கிய இவர், நவீன கிராமப்புற சந்தைப்படுத்தல் பண்டமாற்று முறையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரைச் சேர்ந்த சாமிநாதன்(81), தரும்புரம் ஆதீனத்துக்கு உட்பட்ட குமரக்கட்டளை தேவஸ்தானத்தில் ஓதுவார் பணியைத் தொடங்கினார். திருத்தணி முருகன் கோயிலில் 1974 முதல் 2000 வரை 26 ஆண்டுகள் ஓதுவாராகப் பணியாற்றிய இவர், பின்னர் விருப்ப ஓய்வுபெற்று பல்வேறு கோயில்களில் ஓதுவாராகப் பணிபுரிந்தார்.
தற்போது தருமபுரம் ஆதீன தேவார பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வெள்ளரிக்கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.கிருஷ்ணன். ஆலு குரும்பர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞரான இவர் ‘கிட்னா’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
30 ஆண்டுகளாக பழங்குடியின பாரம்பரியக் கலையை பிரபலப்படுத்திய இவர், பழங்குடியினரின் வாழ்வியலை ஓவியங்களாக வடித்துள்ளார். கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்த கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜா ஸ்தபதி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுள் சிலைகளை உருவாக்கி வருகிறார். கடந்த ஆண்டு 13.6 அடி உயர நர்த்தன நடராஜர் சிலையை வடிவமைத்தார். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 14 அடி உயர நாகா பரணத்தையும் இவர் உருவாக்கி உள்ளார். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இவர் சிலைகளை வடிவமைத்துள்ளார்.
தேசிய விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள ராஜா ஸ்தபதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பூர்ணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிலம்பாட்டக் கலைஞர் பழனிவேல்(53), 18 வயதில் தெருக்கூத்துக் கலைஞராக கலைத் துறையில் நுழைந்தவர்.
தொடர்ந்து, சிலம்பாட்டம் மற்றும் காளியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுபுறக் கலைகளை கற்ற இவர், பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 10 நாடுகளில் சிலம்பப் பயிற்சி அளித்துள்ளார்.
பல்வேறு போட்டிகளிலும் வென்றுள்ள இவருக்கு 2012-ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தற்போது இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பக்தவத்சலம் அகில இந்திய வானொலியில் ஏ கிரேடு கலைஞராகப் பணியாற்றியவர்.
1992-ல் ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் மிருதங்கம் இசைத்தார். பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள இவர் ஏற்கெனவே கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது பக்தவத்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியரும், புகழ்பெற்ற கால்நடை மருத்துவருமான ந.புண்ணியமூர்த்தி(68), தஞ்சை கால்நடை மருத்துவப் பல்கலை.யில் பணியாற்றியவர்.
கால்நடைகளுக்கான பல்வேறு நோய்களுக்குச் சித்த மருந்து மற்றும் வீட்டு வைத்திய முறைகள் மூலம் சிகிச்சை அளித்துள்ளார். மேலும், கால்நடை உரிமையாளர்களுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி, பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.