

கோப்புப் படம்
சென்னை: நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று உற்சாகத்துடன் கொண்டப்படுகிறது. சென்னை மெரினாவில் நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொள்கிறார். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாகடற்கரை காமாஜர் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே இன்று காலை 8 மணி அளவில் குடியரசு தின விழா நடைபெறுகிறது.
தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைப்பார். பின்னர் ராணுவ படைப் பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசு இசைப் பிரிவு, வான்படை பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொள்வார். பின்னர், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார்.
அதன்பிறகு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
ஒரு லட்சம் போலீஸார்: குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார்பாதுகாப்பு, கண்காணிப்புபணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேருந்து, ரயில், விமான நிலையங்களிலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் விழா நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னைமுழுவதும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் இலகுரக ஏர்கிராஃப்ட், பாராகிளைடர்ஸ்,பாராமோட்டார்ஸ், ஹேண்ட்கிளைடர்ஸ், ஹாட்ஏர் பலூன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.