

சென்னை: உள் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 30-ம் தேதி வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 8 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் கக்கதாசத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ., முதல் 7.6 கி.மீ., உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 26) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 27-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: உள் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை உயரக்கூடும்.
மே 29-ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (மே 26, 27) வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார்வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதி, தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் மே 30-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.