

சென்னை: "தமிழகத்தில் திமுகவை வீழ்த்தி அதிமுக,பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமித் ஷா அமைப்பார்" என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும், மு.க. ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்குத் தள்ளி விஜய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்றும் மிஷனரி அரசியல் செய்யும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய கருத்து திணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த கருத்துக் திணிப்பில் 81.71 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்றும், 10.55 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள் என்றும், 7.75 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள் என்றும் மதவெறி அரசியலை திணித்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மத ரீதியான, பிரிவினைவாத அடிப்படையில் அந்த மிஷனரி நிறுவனம் கருத்துருவாக்கத்தை உருவாக்கியது சட்டவிரோதமானது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். சனாதன தர்ம எதிர்ப்பு, இந்து விரோத அரசியல் நடத்தி சிறுபான்மை ஓட்டுக்களை பங்கு போடுவதில் திமுகவிற்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்து தர்மத்தை சிதைக்கும் வகையில் தமிழ் கடவுளை கொச்சைப்படுத்தும் வகையில், பாசிச அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளை தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். விலைவாசி உயர்வு, கொலை கொள்ளை, போதை கலாச்சாரம், கொடுங்கோல் அவுரங்கசீப் ஆட்சி அரசியலுக்கு முடிவு கட்டும் வகையில் அரசியல் சாணக்கியர் அமித்ஷா மக்கள் விரோத தீய சக்தி திமுகவின் ஆட்சிக்கு இன்று புதுக்கோட்டையில் முழுமையான முடிவுரையை எழுத இருக்கிறார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்றவாறு, தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் நிகழ்ச்சியில் அமித்ஷா நாளை பங்கேற்கிறார். சனாதன தர்மத்திற்கு எதிராக நடந்த பல போர்களை வேரோடு வீழ்த்தி இந்து சமுதாயத்தை, தமிழ்நாட்டை காப்பாற்றி அருளிய திருச்சி ஸ்ரீ ரங்கநாதரை தரிசிக்கும் அமித் ஷா டெல்லி சென்று விட்டு அடுத்தது தமிழகம் திரும்பும் பொழுது, தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் பல முக்கிய கட்சிகளோடு மிகப்பெரும் வலிமையோடு கூட்டணி அமைத்திருக்கும்.
கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக, வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இது அந்த கட்சியின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றிய தேர்தலாகும்.
அதே சூழ்நிலையை வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்திக்கும் வகையில் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் இருக்கும். திமுகவின் ஊழல் பண பல அரசியல், நடிகர் விஜய்யின் லாட்டரி அரசியல், செபாஸ்டின் சைமனின் பிரிவினைவாத அரசியல், திருமாவளவனின் பட்டியலின விரோத திருட்டு திராவிட அரசியல் என அனைத்து மக்கள் விரோத அரசியல் கட்சிகளின் பொய் முகமூடிகளின் சாயம் வெளுக்கும்.
மிஷனரி அரசியல் அமைப்புகளின் கருத்துக் கணிப்புகளையும் கருத்து திணிப்புகளையும் மாற்றி, தேசிய ஜனநாயக கூட்டணியை மகத்தான வெற்றி பெற செய்து அரசியல் சாணக்கியர் அமித் ஷா தமிழகத்தில் சரித்திரம் படைப்பார்" என்று தெரிவித்துள்ளார்.