பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.

பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959 செலவில் வழங்கப்படும்.

பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம் </p></div>
வெனிசுலா | இடைக்கால அதிபராக பொறுப்பேற்க துணை அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in