

திருவள்ளூர்: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்யலாம் என தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் வருவது மகிழ்ச்சி.
ஆனால் ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு சென்று சேருகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. மக்கள் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்; இன்னும் ஆரோக்கியமாக பேரவை நடக்க வேண்டும்.
காவல் துறை மானியக் கோரிக்கைக்கு முதல்வர் பதில் கூறவுள்ள நிலையில் தலைநகரில் தவெகவைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது, பாதுகாப்பு வேண்டும் என கட்சியில் சேர்ந்தவருக்கு ஆட்சியே பாதுகாப்பு தரவில்லை.
தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது, முதல்வரிடமே இந்தத் துறை இருக்கும் நிலையில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவது நல்லதல்ல. தமிழக மக்கள் விஜய்க்கு முதல்வர் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள், மக்களுக்கு முழுமையான சேவையைச் செய்வதற்கு முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
ஆங்காங்கே கொலைகள் நடக்கின்றன, மேட்டூரில் 45 நாட்கள் மட்டும் கழித்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது, 3 தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்படுகிறார்கள், தமிழக விவசாயிகள் அதிகக் கடன் சுமையில் தத்தளிக்கிறார்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பிரச்சினை வைத்துக் கொண்டு அதை தீர்க்காமல் யார் பிரதமர் என விவாதித்துக் கொண்டிருப்பது போகாத ஊருக்கு வழியைத் தேடுவது போல் உள்ளது. சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பதில் சொல்ல வேண்டும் என்பதை முதல்வர் அறிந்திருக்க வேண்டும்.
அரசியலுக்கு வந்த பின், ஒரு முதல்வராக பதில் சொல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள், பேரவையின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும். பேரவை மரியாதையாக விவாதிக்கக்கூடிய இடம் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கும்மிடிப்பூண்டி, செய்யூர் பகுதிகள் விமான நிலையம் அமைக்க ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டு, இணைப்பு வசதி இல்லாதது போன்ற காரணங்களை ஆராய்ந்துதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
5700 ஏக்கர் தேவையாக இருந்தது, அதில் 1700 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது, பணமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு பரிசீலனை செய்தால் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.