

தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: “புகையிலை பயன்படுத்துவதால் நினைவாற்றல் மெல்ல மெல்ல குறையும்” என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “பிரதமரின் 'போதை இல்லாத இந்தியா' இயக்கத்தின் ஒரு பகுதியாக, போதைப் பொருட்களால் மனித உடல் உறுப்புகள் சந்திக்கும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிகரெட் மற்றும் புகையிலை பழக்கம் மனித மூளையை எவ்வாறு 10 வினாடிகளில் ஆக்கிரமிக்கிறது என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிகரெட் புகைத்தல் மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள், மனித உடலை தலை முதல் கால் வரை சீரழிக்கின்றன. இதில் முதன்மையான பாதிப்பு நமது உடலின் கட்டுப்பாட்டு மையமான மூளையில் தொடங்குகிறது.
ஒருவர் புகையிலையைப் பயன்படுத்தும்போது அல்லது புகைப்பிடிக்கும்போது, அந்த நச்சுப் புகை நுரையீரலுக்குச் சென்று, பின் இதயத்தை சென்றடைகிறது. வியக்கத்தக்க மற்றும் அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், வெறும் 10 முதல் 20 வினாடிகளுக்குள் இந்த நச்சு மூளையைச் சென்றடைகிறது.
மூளையைச் சென்றடைந்ததும், இது 'டோபமைன்' என்னும் வேதிப்பொருளைச் சுரக்கச் செய்கிறது. இந்த என்சைம் தற்காலிகமாக ஒருவித மகிழ்ச்சியான உணர்வைத் தருவதால், புகையிலை தங்களை உற்சாகப்படுத்துவதாகப் பயனாளர்கள் தவறாகக் கருதுகின்றனர். ஆனால், இந்தத் தற்காலிக இன்பமே பெரும் ஆபத்தின் தொடக்கப் புள்ளி. நாளடைவில் மூளை தனது இயல்பான செயல்பாடுகளுக்குக் கூட இந்த டோபமைனைச் சார்ந்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
புகையிலையினால் மூளையின் மிக முக்கியமான 'கிரே மேட்டர்' பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக நினைவாற்றல் மெல்ல மெல்ல குறைகிறது. மற்றவர்களுடன் உரையாடும் திறன் மற்றும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இந்த பழக்கம் இறுதியில் பக்கவாதம், அதீத சோர்வு மற்றும் கடுமையான மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இட்டுச் செல்கிறது.
ஒரு தற்காலிக இன்பம், மூளைக்கு நிரந்தரப் பாதிப்பை உருவாக்குகிறது. நமது மூளை என்பது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்காகவே தவிர, அடிமையாவதற்காக அல்ல. இருப்பினும், ஒரு நற்செய்தி என்னவென்றால், புகையிலை பழக்கத்தைக் கைவிடுவதன் மூலம் இந்த பாதிப்புகளை மீண்டும் சீரமைக்க முடியும். தாமதமாகத் தொடங்கினாலும் இப்போதே கைவிடுவது நல்லது, என்ற தாரக மந்திரத்தோடு, போதை இல்லாத சமுதாயத்தைப் படைக்க உறுதி ஏற்போம்” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.