

சென்னை: தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் சொல்லும்படி நடந்து கொண்டால் சன்மானமாக 35 கோடி ரூபாய் வரை தருவதாக பேரம் பேசியதாக, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ-வான என்.இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற ரமேஷ் என்பவர், குதிரை பேரம் பேசப்பட்டது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ள வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவில், மத்திய - மாநில அரசுகள், சிபிஐ ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, ரமேஷ் மீதான விசாரணைக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று ஜாமீன் பெற்ற சேதுராஜ், கார்த்திக் ஆகியோரும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், புதிதாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் “மாநில காவல் துறையினர் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு ஏதேனும் விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், “பொய் வழக்கு ஜோடிக்க அவசியம் இல்லை. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிகக்கப்பட்டது.
மேலும் தமிழக அரசு தரப்பில், “வழக்கின் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்துவருவதை சுட்டிக்காட்டி, குதிரை பேரம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.