பெண்களுக்குக் கிடைக்கவிருந்த அதிகாரத்தை தடுத்துவிட்டு வெற்றி என்பதா? - திமுக மீது தமிழிசை கடும் தாக்கு

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்

Updated on
1 min read

“நாடாளுமன்றத்தில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை முடக்கிவிட்டு, எதை வெற்றியாகக் கொண்டாடுகிறீர்கள்? இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்களுக்குக் கிடைக்கவிருந்த அதிகாரத்தை வழிமறித்துத் தடுத்துள்ளது திமுக” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து வாக்களித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழக முதல்வரிடம் நான் ஒரு நேரடி கேள்வியைக் கேட்கிறேன். பெண்களின் உரிமை மறுக்கப்பட்டதை வெற்றி என்று கொண்டாடுகிறீர்களே... இதுதான் உங்கள் திராவிட மாடல் வெற்றியா?

நாடாளுமன்றத்தில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை முடக்கிவிட்டு, எதை வெற்றியாகக் கொண்டாடுகிறீர்கள்? இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்களுக்குக் கிடைக்கவிருந்த அதிகாரத்தை வழிமறித்துத் தடுத்துள்ளது திமுக.

பெண்கள் சட்டமியற்றும் இடத்திலும், முடிவெடுக்கும் அதிகாரத்திலும் அமர வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. ஆனால், பெண்களின் அதிகாரம் தங்களுக்குக் கீழேதான் இருக்க வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் எண்ணம்.

தொகுதிகளும் குறையாது, உரிமையும் பறிபோகாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திலேயே மிகத் தெளிவாக உறுதி அளித்துவிட்டார். ஆனாலும், இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகப்படுத்திக் கொண்டு, போராட்டத்தை நடத்தி, அதில் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இலங்கையில் கொத்துக் கொத்தாகத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்களைத் தமிழர்களாகக் கூட நினைக்காத முதல்வர், இன்று 'தமிழ், தமிழர்' என நாடகமாடினால் மக்கள் நம்பிவிடுவார்களா? பாஜக தமிழகத்துக்குள் நுழைவதைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, முதலில் உங்கள் கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பதைப் பாருங்கள். பெண்கள் உரிமை பற்றி திமுக-வும் காங்கிரஸும் பேசுவது ஒரு போலி முகமூடி. பெண்களுக்கு அநீதி இழைத்துவிட்டு அதை வெற்றி விழாவாகக் கொண்டாடும் இந்த அரசை நாங்கள் தீர்க்கமாக எதிர்க்கிறோம்.

தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கப் போவதாகச் சொல்லும் திமுக, முதலில் தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யட்டும். இன்று தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, கஞ்சா கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிக்கிறார்கள்.

இந்த உண்மையான பிரச்சினைகளை மறைக்கவே முதல்வர் இல்லாத பிரச்சினைகளைக் கையில் எடுக்கிறார். உதயநிதி என்னை 'ஆறு தோல்வி அக்கா' என எள்ளி நகையாடுகிறார். அதற்கு மயிலாப்பூர் மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். நாங்கள் யாரிடமும் சரணடைந்து, யாருடைய தோள் மீதும் ஏறி நின்று எங்கள் தோல்விகளை மறைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்</p></div>
அதிமுக அடிமைகளிடம் மீண்டும் தமிழகம் சிக்கிவிடக் கூடாது: ஸ்டாலின் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in