

“சொந்த மாநிலத்துக்கும், மக்களுக்கும் எதிராக நடந்து கொண்டவர் பழனிசாமி. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவிக்கும் அதிமுக, அடிமைகளிடம் தமிழகம் மீண்டும் சிக்கிவிடக்கூடாது” என திருப்பூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூர் பாண்டியன் நகரில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே ஒரு மாபெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியோடு இங்கே நான் உங்களிடத்தில் வந்திருக்கிறேன். சூப்பர் ஸ்டாரின் ஒரு பாட்டுத் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘என்கிட்ட மோதாதே, இது பெரியாரின் தமிழ்நாடு, வம்புக்கு இழுக்காதே, இது அண்ணாவின் கோட்டையடா, இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே, அத அப்புறமா குட்டுப்பட்டு ஓடாதே’ இதைத்தான் தமிழகம் பாடுகிறது.
நாம் பறக்கவிட்ட கருப்புக் கொடி பாஜக-வின் காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது. தொகுதி மறுவரையறை என்னும் பேராபத்தை 2023-இல் எதிர்க்கத் தொடங்கியது திமுக தான். இதுதொடர்பாக சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றினோம். தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, சட்டப்பேரவையிலும் தீர்மானத்தை நிறைவேற்றினோம். அப்போது அதிமுக-வினர் இரட்டை நாக்கு கொண்ட பேச்சுப் பேசினார்கள்.
வெளியே போய், நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக நாடகம் போடுவதாகப் பேசினர். இந்த மசோதா வந்தவுடன் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தினோம். நாமக்கல்லில் பற்றவைத்த தீ நாடு முழுவதும் பரவியது. இதன் வெப்பம் நேற்று பாராளுமன்றத்தில் அந்த சதித்திட்டத்தை எரித்து சாம்பலாக்கியது. நம்முடைய திட்டங்களைப் பார்த்துத்தான் மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும் காப்பி அடித்து வருகின்றன.
சொந்த மாநிலத்துக்கும், மக்களுக்கும் எதிராக நடந்து கொண்டவர் பழனிசாமி. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவிக்கும் அதிமுக, அடிமைகளிடம் தமிழகம் மீண்டும் சிக்கிவிடக்கூடாது. இதைத் தடுக்க வேண்டும். தமிழகத்தை அடிமை அதிமுக-விடம் இருந்தும், மதவாத பாஜக-விடம் இருந்தும் பாதுகாக்க வேண்டும். சுயநலத்துக்காக தமிழகத்தின் உரிமைகளைக் காவு கொடுக்கத் துணிந்த பழனிசாமிக்கு தமிழகம் 11-வது தோல்வியைக் கொடுக்க வேண்டும். வெகுமானத்துக்காக தன்மானத்தை இழந்து இனமானத்துக்கு துரோகம் செய்யும் பாசிச பாஜக, அடிமை அதிமுக-வை வேரோடு வீழ்த்த வேண்டும்.
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் திருப்பூரின் பின்னலாடைத் தொழிலைச் சிதைத்த பாஜக-வுக்கு இந்தத் தேர்தல் தகுந்த பாடமாக அமையும். அதிமுக- பாஜக கூட்டணிக்கு அளிக்கும் வாக்குகள் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான தடைகற்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.