

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக தென்சென்னை மக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்வை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மனுவாக அதற்கான பெட்டியில் போட்டனர்.
சூரியனைக் கும்பிடுவதை விட விசிலடிக்கவே காங்கிரஸார் விரும்புகின்றனர் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். திமுகவுடன் கூட்டணி அமைப்பதை விட தவெகவுடன் சேரவே காங்கிரஸார் விரும்புகிறார்கள் என்று பொருள்படும் வகையில் அவர் இதைக் கூறியுள்ளார்.
தமிழக பாஜக சார்பில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக தென்சென்னை மக்களிடம் கருத்து கேட்கும் வாகனத்தை முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பழனிசாமி முதல்வராவது உறுதி. எங்கள் கூட்டணி நாளுக்கு நாள் உறுதியாகிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி கூட்டணி சிதறி, உதிரியாகிக் கொண்டிருக்கிறது. திருமாவளவன் 'மறைமுக அழுத்தம் கொடுத்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம்' என வெளிப்படையாகவே அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.
மறுபுறம் கார்த்தி சிதம்பரமோ, 'என்னிடம் கேட்காதீர்கள், முதல்வரிடம் போய் கேளுங்கள்' என விரக்தியில் பேசுகிறார். காங்கிரஸார் சூரியனைக் கும்பிடுவதற்கு பதில் விசிலடிக்க விரும்புகிறார்கள். காமராஜர் பிறந்த மண்ணிலேயே, அவரை அவமானப்படுத்தித் தோற்கடித்தது திமுக. அந்த மண்ணில் இளைஞரணி மாநாடு நடத்த உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? 'பழைய கதை இன்றைய 20 வயது இளைஞர்களுக்குத் தெரியாது' என முதல்வர் நினைக்கிறார். ஆனால், 1949 முதல் தமிழக இளைஞர்களை நீங்கள் எப்படியெல்லாம் ஏமாற்றினீர்கள் என்பதைத் தோலுரித்துக் காட்ட நாங்கள் இருக்கிறோம்.
பிரதமர் மோடியின் அமெரிக்க ஒப்பந்தங்களால் திருப்பூர் ஜவுளித் தொழில் மேன்மையடையப் போகிறது. ஏற்றுமதி அதிகரித்து விவசாயிகள் பலன் பெறப்போகிறார்கள். நாட்டுக்கு நல்லது நடப்பதைப் பொறுக்கமுடியாமல், ‘மோடி அடிமையாகிவிட்டார்' எனத் தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள்.
இது மோடியின் ராஜதந்திரம். அவர் உங்களைப் போன்ற தந்திரவாதி அல்ல. நாடாளுமன்றத்தில் பிரதமரைத் தாக்க முயன்ற தமிழக எம்.பி-க்களின் செயலால் ஒட்டுமொத்த தமிழகமே இன்று வெட்கித் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று யாருக்கும் பாதுகாப்பில்லை. முன்பு பேனர் விழுந்ததற்குப் பழி சுமத்திய ஸ்டாலின், இன்று திமுக கொடி கட்டும்போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? கல்லூரி விடுதி உணவில் புழுக்கள் நெளிகின்றன. இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப்போகிறார்?
அமித்ஷா இப்போதைக்கு தமிழகம் வரவில்லை. ஆனால், திமுகவுக்கு ஆட்டம் காட்ட அமித்ஷா நிச்சயம் வருவார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது. திமுக கூட்டணி வேண்டாம் என்று நினைப்பவர்கள், பழனிசாமியையும், பாஜகவில் அமைக்கப்பட்டுள்ள குழுவையும் நேரில் வந்து சந்திக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.